பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமாக வீடு மற்றும் கார் எதுவும் இல்லை என்று, அவர் சமர்ப்பித்துள்ள தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறங்கி உள்ள பிரதமர் மோடி, நேற்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனுதாக்களின் போது பாஜக மூத்த தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் கூட்டணி கட்சியான பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் வீடு, கார் எதுவும் இல்லை என்பது போன்ற தகவல்கள், அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் மோடியின் இந்த பிரமாண பத்திரத்தில் அவருக்கு 3.02 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 ஆயிரத்து 920 ரூபாய் ரொக்க பணம் வைத்திருப்பதாகவும், அவருக்கு சொந்தமான நிலம், வீடு, கார் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 2018-19 நிதி ஆண்டில் பிரதமர் மோடியின் வரிக்குட்பட்ட வருமானம் 11 லட்சத்திலிருந்து, 2022 -23 நிதி ஆண்டில் 23.5 லட்சம் ஆக உயர்ந்திருப்பது அவர் தாக்கல் செய்த பிரமாணத்திற்கு மூலம் தெரிய வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வைத்துள்ள இரண்டு வங்கி கணக்குகளில் ஒரு வங்கி கணக்கில் 73 ஆயிரத்து 34 ரூபாயும், மற்றொரு வங்கி கணக்கில் 7000 ரூபாயும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் எஸ்பிஐ வங்கியில் நிலையான வைப்பு தொகையாக பிரதமர் நரேந்திர மோடி 2,85,60,338 ரூபாய் வைத்துள்ளதாகவும் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியிடம் 2 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை விட, தற்போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது