Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலம்: இன்று திறக்கிறார் பிரதமர் மோடி!

பீஹாரில் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார்.

பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே 1.9கி.மி நீளத்திற்கு பிரமாண்டமாக ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு 2003 – 2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்து 516 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைக்க உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலம் திறக்கப்படுவது பீஹார் மாநில வரலாற்றில் சிறப்புமிக்க நிகழ்வாகும். இந்த பாலம் திறக்கப்படுவது இப்பகுதியில் உள்ள மக்களின் 86 ஆண்டு கால கனவை நிறைவேற்றி, காத்திருப்புக்கு முடிவு கட்டும். இத்திட்டத்துடன் 12 ரயில் திட்டங்களையும் பயணிகள் வசதிகளுக்காக பிரதமர் திறக்கவுள்ளார்.

பீஹாரில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கடந்த சில நாட்களில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.

Exit mobile version