கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு உலக நாடுகளில் மெல்ல, மெல்ல, பரவி உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து தொடர்ந்து வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் சமீபகாலமாக நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறைந்து வந்தது. இதற்கு காரணம் இந்தியாவில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டது தான் என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக சொல்லவேண்டுமென்று சொன்னால் இந்தியாவில் நோய்த்தொற்று இல்லை என்ற ஒரு சூழ்நிலை ஏற்படவிருந்த நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று வருகிறது.
அதாவது, நோய்த்தொற்று பரவல் வட மாநிலங்களிடையே மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக, மீண்டும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதோடு முகக்கவசம் அணியவில்லையெனில் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்திகொள்ளாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தினடிப்படையில் ஒரே நாளில் 2483 தொற்றுகளுடன் நாட்டில் இது வரையிலான நோய் தொற்று பாதிப்பு 4,30,62,569 என அதிகரித்திருக்கிறது.
புதிதாக 1347 உயிரிழப்புகளுடன் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 5,23,622 என அதிகரித்திருக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் தற்போதைய நோய்த்தொற்று சூழ்நிலை தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணியளவில் காணொலிக் காட்சியின் மூலமாக ஆலோசனை நடத்தவிருக்கின்றார்.
அந்த சமயத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இது குறித்து ஒரு அறிக்கை வழங்குவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.