ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.பழங்குடியின கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் மற்றும் அலங்கார ஊர்தி கலைஞர்கள் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்
பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் 2020 விருது பெற்ற 49 குழந்தைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை, ஜனவரி 24, 2020 அன்று சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
விருதுபெற்ற இந்த 49 பேரும், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாவர்.
கலை & கலாச்சாரம், புதுமை கண்டுபிடிப்புகள், கல்வித் திறன், சமூக சேவை, விளையாட்டு மற்றும் வீர-தீர செயலுக்காக இந்த குழந்தைகள் விருதுபெற்றுள்ளனர்.
தேச வளர்ச்சியில் குழந்தைகளும் மிக முக்கியப் பங்குதாரர்கள் என்பதை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. அவர்களது நம்பிக்கையும், எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படுவதுடன், அவர்களது சாதனைகளுக்கு உரிய விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு குழந்தையும் மிக முக்கியமானவர் என்பதோடு, அவரது சாதனைகள் பாராட்டப்பட வேண்டியவையாகும். இவர்களில் சிலரது சாதனைகள், மற்ற பலருக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.
அந்த வகையில்தான், நமது குழந்தைகளின் சிறப்புமிக்க சாதனைகளுக்காக அவர்களை அங்கீகரிக்கும் விதமாக, மத்திய அரசு ஆண்டுதோறும் இதுபோன்ற விருதுகளை வழங்கி வருகிறது.
புதுமை கண்டுபிடிப்புகள், கல்வித் திறன், சமூக சேவை, கலை & கலாச்சாரம், விளையாட்டு மற்றும் வீர-தீர செயலாற்றுவதில் சிறப்புமிக்க சாதனை படைத்த எந்தவொரு குழந்தையும், இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். உயர்மட்டக் குழு ஒவ்வொரு விண்ணப்பத்தையும் கவனத்துடன் பரிசீலித்து விருதுபெறுவோரை தேர்வு செய்யும்.
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுகளை நேற்று (22.01.2020) வழங்கினார்.
பழங்குடியின கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் & அலங்கார ஊர்தி கலைஞர்களுக்கு வரவேற்பு
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள பழங்குடியின கலைஞர்கள், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் & அலங்கார ஊர்தி கலைஞர்கள்1,730-க்கு மேற்பட்டோருக்கு 24.01.2020 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்று அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.