பெரியாரின் கனவை நினைவாக்கியதே பாமக தான்! அன்புமணி ராமதாஸ் காட்டம்!

0
264

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனால், பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.  வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், சேலம் மாநகராட்சியில் செயல்படுத்த வேண்டிய செயல் திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் பேசிய அன்புமணி, சேலத்தில்தான் பத்து ஆண்டுகள் படித்ததாக தெரிவித்தார். படிக்கும் காலத்தில் கால்பந்து அணி உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றதாகவும், சேலத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சுற்றியதாகவும் கூறினார். 40 ஆண்டுகளுக்கு முன்பு படிக்கும் காலத்தில் சேலம் மாநகரம் எப்படி இருந்ததோ, அதே போன்று தான் இப்போதும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

சேலம் மாநகரில் எந்தவித போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாகவும், எந்தவித திட்டமிடலும் இல்லாமல், தேவையற்ற மேம்பாலம் அமைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய அன்புமணி, அங்குள்ள பாலத்தால் அடுத்த பத்தாண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றார். உலகில் வளர்ந்த பல்வேறு நாடுகளின் தலைநகர்களுக்கு சென்றுள்ளதாகவும், எங்குமே மாநகருக்குள் மேம்பாலங்கள் அமைத்ததில்லை என்றும், மாநகர் பகுதிக்குள் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டக்கூடாது என்றும் அவர் கூறினார்.

மேட்டூர் உபரிநீர்த் திட்டத்தில் இருந்து ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்பினால், சேலம் மாநகராட்சிக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான ஒன்றரை டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும் என்ற அவர், அத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அரசு மறுப்பதாக அன்புமணி தெரிவித்தார். மேட்டூர் உபரி நீர்த் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சேலம், நாமக்கல் என அண்டை மாவட்டங்களும் செழிப்படையும் என்றும் அவர் கூறினார்.

சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்பது தந்தை பெரியாரின் கனவு என்ற அன்புமணி, ஆனால், பெரியாரின் பெயரை வைத்து அரசியல் செய்யும் திமுகவும், அதிமுகவும் அதை செய்யவில்லை என்றார். ஆனால், சேலம் ரயில்வே கோட்டம் அமைத்து தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றியது பாமக தான் என்று அன்புமணி பெருமிதம் தெரிவித்தார். அதே போன்று சேலத்தில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கொண்டுவந்ததும் பாமகதான் என்றார்.

சேலம் மாநகராட்சியில் பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்று, மேயராக பாமக உறுப்பினர் தேர்ந்தெடுத்ததும், அவர் போடும் கையெழுத்து மாநகரில் உள்ள மதுக்கடைகளை மூடுவதற்காக இருக்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். மேயர் பதவிக்கு வானலாவிய அதிகாரங்கள் இருப்பதாக தெரிவித்த அவர், அந்த அதிகாரங்களை தமிழக அரசு பறித்துவிட்டு, சென்னையில் குவித்துள்ளது என்றார். மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக தெரிவிக்கும் திமுகவும் அதிமுகவும், உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய அதிகாரத்தை வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

லண்டனில் மேயராக இருந்த போரிஸ் ஜான்சன் தான், தற்போது இங்கிலாந்தின் பிரதமராக இருக்கிறார் என்ற அன்புமணி, சென்னையின் மேயராக இருந்தவர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார் என்று கூறினார். மேயர் பதவிக்கு அதிகாரங்கள் ஏராளம் உள்ளதாகவும், அதனால், பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால், மாநகரை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

சேலத்தில் மெட்ரோ ரயில் உட்பட பல்வேறு திட்டங்களை பாமக வைத்துள்ளதாக தெரிவித்த அன்புமணி ராமதாஸ், இந்தத் தேர்தலை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அடித்தளமாகக் கொண்டு, பாமக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.