ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி! பாமகவின் கூட்டணி நிபந்தனை

0
246
Dr Ramadoss with Edappadi Palanisamy

ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி! பாமகவின் கூட்டணி நிபந்தனை

தமிழகத்தில் விரைவில் வரவுள்ள அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் ஒவ்வொன்றும் ஆயத்தமாகி வருவது சமீப கால நிகழ்வுகளை கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அந்தவகையில் வழக்கம் போல தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக மற்ற கட்சிகளை முந்தி கொண்டு முதலாவதாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சிப்பது மற்றும் இணையதள விளம்பரம் மூலம் கட்சி உறுப்பினர்களை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் திமுக இறங்கியுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் ஆளும் அதிமுக,பாமக,பாஜக,தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர் அணியாகவும் போட்டியிட்டன.தற்போதைய நிலையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த்,பாஜகவின் எல்.முருகன் மற்றும் விசிகவின் திருமாவளவன் உள்ளிட்டோர் பேச்சுக்களை கவனிக்கும் போது இந்த கட்சிகள் அணி மாற தயாராக உள்ளது போலவே தெரிகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை போல் அடுத்து வரும் தேர்தல் இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான தேர்தலாக இருக்காது.இருகட்சிகளிலும் ஏற்பட்ட பெரும் தலைவர்கள் மறைவினால் தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டதாகவே அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.குறிப்பாக அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட உட்கட்சி குழப்பம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

தற்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமி தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆட்சியை தக்கவைத்து கொண்டாலும் அடுத்து வரும் தேர்தலில் யார் முதல்வர் என்ற விவாதம் தற்போதே கிளம்பி விட்டது.அதேநேரத்தில் திமுக தரப்பிலும் முறையான நிர்வாக அமைப்பு இல்லாமல் பி.கே போன்ற அரசியல் வியூக வகுப்பாளர்கள் மற்றும் கவர்ச்சிகரமான இலவச திட்டங்களை மட்டுமே அக்கட்சி நம்பியுள்ளது.

இவ்வாறான சூழலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பு குறைவே. எனவே அடுத்து வரும் இந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளில் எது சிறப்பான வியூகம் அமைக்கிறதோ அந்த கட்சி தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக கூட்டணி வியூகம் இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது போன்ற காரணங்களால் தான் திமுக மற்றும் அதிமுக தலைமை அதன் கூட்டணி கட்சிகளை மிகவும் அனுசரித்து செல்லும் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

Pmk in DMK alliance ..? Vck intends to leave... Thirumavalavan who caused a stir

தற்போதைய நிலையில் கூட்டணி கட்சிகளில் பாமகவிற்கான செல்வாக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கூடியுள்ளதாகவே கருதப்படுகிறது.இதை நடந்து முடிந்த மக்களவை மற்றும் அத்துடன் நடைபெற்ற இடைத்தேர்தலும்,அடுத்து நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகளும் தெளிவாக உணர்த்தியுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தொடர வட மாவட்டங்களில் கிடைத்த பாமகவின் வாக்குகளே காரணம் என அதிமுக தலைமையும் உணர்ந்துள்ளது. இதனால் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாமகவை அதிமுக கூட்டணியில் தக்க வைத்து கொள்வதையே எடப்பாடி தரப்பு விரும்புகிறது.

இதை உணர்த்தும் வகையில் தான் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதே நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர் ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். குறிப்பாக அந்த வாழ்த்து பதிவில் “அய்யா மருத்துவர் ராமதாஸ்” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கூட்டணியில் இருப்பதால் அதிமுக தலைமை வாழ்த்துச் சொல்வதை சாதரணமாக எடுத்துக் கொண்டாலும், எதிர்கட்சியான திமுக தலைவர் அதுவும் கடந்த தேர்தலின் போது கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்த ஸ்டாலின் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அய்யா மருத்துவர் ராமதாஸ் என்று அடைமொழியோடு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் இது பாமகவை திமுக கூட்டணி பக்கம் இழுப்பதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டியில் தங்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த பிரச்சனையுமில்லை என தெரிவித்திருந்தார். இது விடுதலை சிறுத்தைகள் உள்ள திமுக கூட்டணியில் பாமக இணைய தயார் என்பதற்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது.

இவ்வாறு கூட்டணி கட்சிகளில் பாமகவிற்கு செல்வாக்கு உயர வட மாவட்டங்களில் அக்கட்சி வைத்துள்ள நிலையான வாக்கு வங்கியே காரணமாக கருதப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக ஏறக்குறைய 70 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வகையில் வாக்குகளை பெற்றது. இதனால் தான் பாமகவை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள அதிமுகவும், எப்படியாவது தங்களது கூட்டணிக்கு இழுக்க திமுகவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. இதனை புரிந்து கொண்ட மருத்துவர் ராமதாஸ் அதற்கேற்றவாறு அரசியல் வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக தான் அதிமுக கூட்டணியில் இருந்தாலும் கூட திமுக கூட்டணிக்கான வாய்ப்புகளையும் அவர் அடைத்துவிடவில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது.

மருத்துவர் ராமதாஸ் வகுக்கும் இந்த தேர்தல் வியூகத்தில் எந்த கூட்டணியாக இருந்தாலும் இதுவரை இருந்தது போல வெறும் தொகுதி எண்ணிக்கை மட்டுல்லாது ஆட்சியிலும் பங்கு, கூடவே அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி என்பதையும் நிபந்தனையாக வைக்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.தற்போதைய சூழலில் பாமகவின் வாக்குகள் இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதால் நிச்சயம் இந்த நிபந்தனையை ஏற்று கொள்வார்கள் என்பதாலேயே அவர் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆட்சியில் பங்கும்,அன்புமணி ராமதாஸை துணை முதலமைச்சராக்குவதாக வாக்குறுதி அளிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என்று மருத்துவர் ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கபடுகிறது. இதுவரை பாமக வெறும் தொகுதிகளுக்காக கூட்டணி வைத்தது என்பதை விட தற்போது வன்னியர் ஒருவரை துணை முதலமைச்சராக்குவதற்கான கூட்டணி என்கிற பிரச்சாரமும் மாற்று கட்சி வன்னியர் வாக்குகளையும் கூட கவர உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தையின் போதே இது குறித்து அதிமுக தலைமையுடன் ஆலோசித்துள்ளதாகவும்,தற்போது பாமகவின் இந்த நிபந்தனைக்கு அதிமுக அளிக்கும் பதிலை பொறுத்து தமிழகத்தில் கூட்டணி வியூகங்கள் மாற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.