21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு
விக்கிரவாண்டி சட்டமண்ட தொகுதி அதிமுகவின் இடைத்தேர்தல் வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இன்னும் 5 நாட்களில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஒத்திகை போல கருதுவதால் இதற்கான முக்கியத்துவம் கூடியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும், திமுக சார்பாக புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டியில் பாமக சார்பில் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய ராமதாஸ், “1995ஆம் ஆண்டு பாமக மாநாடு நடந்த போது கலைஞருக்கு மஞ்சள் துண்டு அணிவித்தேன். அதன் பிறகு கடைசி வரை அவர் மஞ்சள் துண்டு அணிந்திருந்தார். ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த தேர்தலில் எங்களை கழட்டிவிட்டு விட்டு ஜி.கே.மூப்பனாருடன் கூட்டணி வைத்துக்கொண்டார். அது அவருக்கு கைவந்த கலை. இதற்காகத் தான் கலைஞர் என்றால் கலைப்பவர் என்று நான் வேடிக்கையாகக் கூறுவேன்” என்று விமர்சித்தார்.
விக்கிரவாண்டி தொகுதியில் ஸ்டாலினின் பொய் மூட்டையும், புளுகும் எடுபடாது என்று குறிப்பிட்ட ராமதாஸ், “இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 வன்னியர்கள் சாவுக்கு காரணமாக இருந்தது திமுக தான். ஏனெனில் அன்றைக்குத் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. நான் 6 மாதங்களுக்கு முன்பே இடஒதுக்கீடு போராட்டம் குறித்து கலைஞருக்கு கடிதம் எழுதினேன். 7 நாள் சாலை மறியல் போராட்டத்தின் போது எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் திரும்பி வந்த பிறகு போராட்டம் குறித்து கேள்விப்பட்டு என்னை அழைத்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களிடமும் இதுதொடர்பாக கோபப்பட்டார். 13 சதவிகித இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவணத்தில் எழுதிவைத்தார். ஆனால், ஒரு மாதத்தில் அவர் இறந்துவிட்டார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த ஆவணம் ஒரு மூத்த அமைச்சரால் மறைக்கப்பட்டுவிட்டது” என்றும் தெரிவித்தார்.
மேலும் 108 ஆம்புலன்ஸை கொண்டு வந்தது அன்புமணி ராமதாஸ் தான், ஆனால் தாங்கள் தான் கொண்டு வந்தோம் என திமுக பொய் கூறுவதாகவும் விமர்சித்தார்.