இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை

0
215
PMK Lawyer K Balu

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரும் வழக்கு – உடைத்தெறிய தயாரான பாமகவின் சமூக நீதிப் பேரவை

தமிழகத்தில் 1980 களில் வன்னியர் சமுதாயம் பொருளாதாரத்திலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கி உள்ளதால் அவர்களுக்கு உரிய 20% சதவீத தனி இட ஒதுக்கீட்டை கேட்டு மருத்துவர் இராமதாஸ் தலைமையில் பல்வேறு வன்னிய கூட்டமைப்புகள் போராடினார்கள்,அதில் 21 உயிர்களையும் பலி கொடுத்தார்கள். ஆனால் அன்று தனி இட ஒதுக்கீடு தராமல் எம்.பி.சி என்ற புதிய பிரிவை உண்டாக்கி அதில் 108 சாதிகளை உள்ளடக்கிய 20 சதவீத இட ஒதுக்கீட்டை திமுக அரசாங்கம் தந்தது.

ஆனால் வன்னியர் மக்கள் இதில் அதிகம் பயன்பெறவில்லை என்று தொடர்ந்து பாமக தரப்பு குற்றம் சாட்டி வந்துள்ளார்கள். அதனால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் தனது கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன் வைத்தார்கள். ஆனால் எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை. தற்போது 2021 தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சூழலை பயன்படுத்தி கொண்டு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் வன்னிய மக்களை ஒன்று திரட்டி வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார்.

தேர்தல் நேரம் என்பதாலும் வன்னிய மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் வேறு வழியின்றி வன்னிய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றினர். மேலும் இதற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதனால் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது என்று வன்னிய சமுதாய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

இந்நிலையில் இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த திமுக தலைவரான கலைஞரின் சமூகமான இசை வேளாளர் பேரவை சார்பாகவும், இன்னும் சில சமுதாயம் சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், திருச்சி திமுக சார்பாக இசை வேளாளர் பேரவை கூட்டம் நடைபெற்ற பின்னர் வழக்கு தொடரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் தென்னாட்டு மக்கள் கட்சியின் தலைவர் கணேசத்தேவர் சார்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது .

இதற்கு பாமகவின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான கே.பாலு அவர்கள் வன்னியர்களின் தனி உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக யார் எத்தனை வழக்கு போட்டாலும் அதை சமூக நீதிப் பேரவை உடைத்தெறியும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இவர் பாமகவிற்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளை தொடர்ந்து அதில் அனைத்திலும் வெற்றியும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.