மருத்துவர் ராமதாஸுக்கு 83 வது பிறந்த நாள்! பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
இன்று ஜூலை 25 ஆம் தேதி பிறந்தநாள் காணும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு பாரத பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கி வரும் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் 82 வயதை நிறைவு செய்கிறார்.
தேசிய அளவில் சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இவரின் 83 வது பிறந்தநாளை முன்னிட்டு பாமக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.அதே போல தேசிய மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் மருத்துவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி மருத்துவர் ராமதாஸை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும் அவரது உடல்நலனை விசாரித்த பிரதமர் டெல்லி வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.அடுத்து தமிழக முதல்வரான முக.ஸ்டாலின் மருத்துவர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியுள்ளதாவது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்! என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா @drramadoss அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும் வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்!
— M.K.Stalin (@mkstalin) July 25, 2021
தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களும் மருத்துவர் ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியுள்ளதாவது.பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும்,தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான மருத்துவர் திரு.S.ராமதாஸ் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவர் எல்லா நலமும்,வளமும் பெற்று தொடர்ந்து மக்களுக்கான அரசியல் தொண்டாற்றிடவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி.வேலுமணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.