Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலினைக் கெஞ்சி கூத்தாடியாவது டி ஆர் பாலு விவாதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்: கலாய்க்கும் பாமக தலைவர் ஜி.கே மணி

ஸ்டாலினைக் கெஞ்சி கூத்தாடியாவது டி ஆர் பாலு விவாதத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்: கலாய்க்கும் பாமக தலைவர் ஜி.கே மணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேற அதிமுகவின் 11 உறுப்பினர்களும், பாமகவின் அன்புமணியும் ஆதரவாக வாக்களித்தது தான் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுக தான் என்றும், தன்னுடன் இது தொடர்பாக ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

இதே போல ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் திமுக செய்த துரோகங்கள் குறித்த நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாசும் சவால் விட்டார். ஆனால் அதற்கு நேரிடையாக எந்த பதிலும் கூறாமல் நிலைமையை சமாளிக்க பதிலளித்த டி.ஆர்.பாலு அன்புமணியை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காகவே மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும் சம்பந்தமே இல்லாமல் குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளதாவது :

2ஜி ஊழலில் இருந்து தப்பிக்க 1.5 லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றது திமுக தானே? என்ற தலைப்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஈழத்தமிழர்களின் நலனுக்காக துரும்பைக்கூட கிள்ளிப் போடாத திமுக, இப்போது உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை இருப்பதைப் போல நாடகமாடுகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், ஈழத்தமிழர்களுக்கு தி.மு.க. செய்த துரோகங்களை ஆண்டுவாரியாக ஆதாரங்களுடன் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

மருத்துவர் அய்யா அவர்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் தவறு இருந்தால், அதை ஆதாரங்களுடன் மு.க.ஸ்டாலின் மறுத்திருக்கலாம். ஆனால், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும், அவற்றுக்கு பதிலளிக்க முடியாமலும் பதுங்கிக் கொண்டு, திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மூலம் பதிலறிக்கை கொடுத்துள்ளார். சரியான தேர்வு தான்.

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்வதில் திமுக தலைவர்களான கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சற்றும் சளைக்காதவர் தான் டி.ஆர். பாலு. இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த கொடூரன் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று அவனது மாளிகைக்கு சென்று சிரித்துப் பேசி விருந்து உண்டு பரிசுப்பெட்டி வாங்கி வந்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கு தலைமையேற்றதே இந்த டி.ஆர். பாலு தான். அந்த வகையில் தமிழின துரோகத்தில் கலைஞருக்கு முதல் வாரிசே இவர் தான்.

டி.ஆர். பாலு நீட்டி முழக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை நானும் பலமுறை படித்துப் பார்த்தேன். எந்த இடத்திலும் ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் தொடர்பாக மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பியிருந்த 22 வினாக்களுக்கு விடைகளை காணவில்லை. மாறாக, 2019-ஆம் ஆண்டு பிரச்சினைக்கு 2009-ஆம் ஆண்டுக்கு மருத்துவர் அய்யா சென்று விட்டதாக பாலு கூறியிருக்கிறார். அதிலென்ன அவருக்கு பிரச்சினை?

டி.ஆர். பாலு அவர்களே….

10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய திமுக துணை போனதே? அந்த பாவம் தொலைந்து விடுமா?

30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதற்காக வேலூரில் சிறப்பு முகாமை உருவாக்கி அதில் அப்பாவி ஈழத் தமிழர்களை அடைத்து வைத்ததும், அதை எதிர்த்துக் கேட்டார்கள் என்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தி இரு இளைஞர்களை படுகொலை செய்ததும், 130 பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததுமான பாவம் இல்லாமல் போய்விடுமா?

10 ஆண்டுகள் ஆகப்போகிறது என்பதற்காக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அகதிகள் மீது காவல்துறையை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றம் மன்னிக்கப்பட்டு விடுமா?

காலம் காயங்களுக்கு வேண்டுமானால் மருந்து போடலாம். திமுக செய்த பாவங்களுக்கு பரிசு அளிக்காது; துரோகங்களுக்கு மன்னிப்பு வழங்காது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்த, இனப்படுகொலைக்கு துணை நின்ற தமிழின துரோகிகள் திமுக தலைவர்கள் தான். இந்த வரலாற்றை மாற்றி எழுத முடியாது.

ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு பதிலளிக்க வக்கற்ற ஸ்டாலின், இனப்படுகொலை பாவத்தில் தங்களில் ஏஜண்டாக திகழ்ந்த டி.ஆர். பாலுவை விட்டு அறிக்கை தருகிறார். ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களைக் காப்பாற்றுவதற்காக ஈழத்தமிழர் உரிமையை மருத்துவர் அய்யா அவர்கள் காவு கொடுத்து விட்டதாக பாலு பொய் மாலைகளை சூட்டியிருக்கிறார். ஊழல் அசிங்கங்களை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் திமுகவினரா ஊழல்களைப் பற்றி பேசுவது? ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுக தான் என்பதை உலகமே அறியுமே?

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எதிர்க்கத் துணிச்சல் இன்றி அமைதி காத்ததும், 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்து நாடகமாடியதும், விடுதலைப்புலிகள் குறித்த சில விவரங்களை அறிந்து கொள்வதற்காக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினியை சந்திக்க பிரியங்கா காந்தியை சட்டவிரோதமாக அனுமதித்து விட்டு திமுக அரசு கைகட்டி அமர்ந்திருந்தது எல்லாம் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தானே? இதை திமுகவால் மறுக்க முடியுமா?

‘‘2ஜி ஊழலில் முக்கியக் குற்றவாளியான சாகித் பால்வாவை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தான் ஊழல் பணம் கைமாறியது. இது குறித்த விவரங்களை ஆ.இராசாவின் நண்பர் சாதிக்பாட்சா அறிந்திருந்தார். இந்த உண்மைகளை சி.பி.ஐயில் சொல்லி விடுவார் என்பதற்காகத் தான் அவர் ‘தற்கொலை’ செய்து வைக்கப்பட்டார்’’ என்று திமுக கூட்டணியிலுள்ள ஒரு தலைவர் கூறினாரே… அதை மறுக்க முடியுமா?
மு.க. ஸ்டாலினின் நண்பராக இருந்த அண்ணாநகர் ரமேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதன் ரகசியத்தை வெளியிட முடியுமா?

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட விதிமீறல் வழக்கு தான் இருக்கிறது. அந்த வழக்கிலும் அவர் மீது தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறது. அந்த வழக்கை அவர் நேர்மையாக எதிர்கொண்டு வருகிறார். ஆனால், 2ஜி ஊழல் வழக்கிலிருந்து மகளைக் காப்பாற்றுவதற்காக ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்ற திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

டி.ஆர். பாலு தம்மை மெத்தப்படித்த மேதாவியாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் தான் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற மருத்துவர் அய்யாவின் நிலைப்பாட்டை விமர்சித்திருக்கிறார். அதாவது ஈழத்தமிழர்களுக்கு இலங்கையில் ஓர் குடியுரிமை இருக்கிறதாம்; இந்தியாவில் குடியுரிமைக் கொடுக்கப்பட்டால் இரட்டைக் குடியுரிமையாகி விடுமாம். இதைவிட அபத்தம் இருக்க முடியாது.

1948-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டத்தின் 21(1) ஆவது பிரிவின்படி இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவரது இலங்கைக் குடியுரிமை தானாகவே பறிக்கப்பட்டு விடும் (21.(1) A person who is a citizen of Sri Lanka by registration shall cease to be a citizen of Sri Lanka if he voluntarily becomes a citizen of any other country. ). இந்தியாவும், இலங்கையும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டால் தான் ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியும். அதற்காகத் தான் பா.ம.க. பாடுபட்டு வருகிறது. ஆனால், இதுகூட தெரியாமல் பாலு உளறுகிறார்.

நான் மீண்டும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன். ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை துணை போனது திமுக தான். ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செயததும் திமுக தான். இந்த விஷயத்தில் ஸ்டாலினுக்காக கம்பு சுழற்றுவதை விடுத்து, இது குறித்து மருத்துவர் அய்யா அல்லது மருத்துவர் அன்புமணி இராமதாசுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலினை கெஞ்சி கூத்தாடியாவது டி.ஆர். பாலு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version