பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

0
166

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தபடி வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று தெரிவித்திருக்கின்றது.

வெளி ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னாலும் கூட அதிகமான கூட்டத்தை கூட்டி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகை இடுவது என்று முடிவு செய்து இருக்கின்றது பாட்டாளி மக்கள் கட்சி தலைமை. முதல்நாள் போராட்டத்தில் இளைஞர் அணியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவர் ஜி.கே மணி ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 50 நிர்வாகிகள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் தலா ஒரு கார் எடுத்துக் கொண்டு வரவேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் ஐந்து பேரை அழைத்து வர வேண்டும். இதைத்தவிர ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய மாவட்ட கவுன்சிலர்கள் என அனைவரும் ஆட்களை கூட்டி கொண்டு வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை உத்தரவிட்டு இருக்கின்றது.

எடுத்துக்காட்டாக கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன ஒரு தொகுதிக்கு 50 கார் என்று மாவட்டத்தில் 450 கார் என கணக்கு போட்டு இருக்கிறார்கள் மாவட்டத்துக்கு சராசரியாக 2000 பேர் என்றால் கூட 15 மாவட்டங்களில் இருந்தும் 30 ஆயிரம் பேர் வருகை தருவார்கள். அன்புமணி ராமதாஸ் அவர்கள் காவல்துறையினர் தடுத்தால் அதனை மீறி எவ்வாறு வர வேண்டும் என்ற ரகசிய திட்டங்களையும் போட்டுக் கொடுத்து இருக்கின்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் வியூகம் இவ்வாறு என்றால் அதை தடுப்பதற்கு காவல்துறையும் சில வியூகங்களை வகுத்து இருக்கின்றது .

சென்னைக்குள் பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டம் வந்து விடாதபடி அந்தந்த மாவட்டங்களில் தடுத்து நிறுத்திக் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை உத்தரவிட்டு இருக்கின்றது. இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் தடுப்பு பணிகளில் இறங்கி விட்டது காவல்துறை.

இதனை அறிந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை முக்கிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நேற்று மாலையே கிளம்பி சென்னையில் வந்து தங்கும்படி தெரிவித்திருக்கின்றது. பேருந்தில் வந்தால் தடுக்க மாட்டார்கள் அதன் காரணமாகவே அதிகாலையில் பேருந்தில் புறப்பட்டு வந்துவிடுங்கள். அதிலும் குறிப்பாக காரில் வருபவர்கள் கொடிகட்டி காவல்துறையிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் தொடர்புகளை கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 9 மணி அளவில் உஷார் ஆனதால் இரவு முழுவதும் சாலையில் நின்று வாகன சோதனைகளை செய்து அந்த கட்சியினரை கைது செய்து வருகிறார்களாம்.வட மாவட்டங்களில் சென்னை காவல்துறையினர் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனைகளை செய்து பாட்டாளி மக்கள் கட்சியினர் தேடித்தேடி கைது செய்து வருகிறார்களாம்.

காவல்துறையின் நெருக்கடிகளை மீறி பல ஆயிரக்கணக்கான தொண்டர்களை ஒன்று திரட்டி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சென்னையை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றது பாமகவின் தலைமை. ஆனாலும் அவர்களின் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.