பாமக தலைமையில் புதிய கூட்டணி? அன்புமணி ராமதாஸ் தெரிவித்த பரபரப்பு தகவல்
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கட்சியினரை சந்தித்து வருகிறார்.அப்போது அடுத்த 2026 தேர்தலில் பாமக ஆட்சி தான் அமையும் என ஆணித்தரமாக பேசி வருகிறார்.இவர் இப்படி பேசி வருவதால் தமிழகத்தில் பாமக மீண்டும் தனித்து போட்டியிடுகிறதா என அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் 2026 தேர்தலில் வெற்றி பெற்று காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று பேசியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காமராஜரின் திருவுருவச் சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.
அந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் பேசியதாவது, கல்விக்கண் திறந்தவர் காமராஜர். வறுமையில் வாடும் மாணவர்கள் பசியோடு படிக்க முடியாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர். இதுவரை எவரும் செய்யாத கல்வி புரட்சியை செய்து காட்டியவர், தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து தொழில் புரட்சி செய்தவர். காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் பாமகவின் கனவு.
நிச்சயமாக அதை பாட்டாளி மக்கள் கட்சி செய்து காட்டும். காங்கிரஸ்காரர்கள் கூட காமராஜர் ஆட்சியை மறந்துவிட்டார்கள். ஆனால் பாமக தான் காமராஜர் ஆட்சியை பற்றி தொடர்ந்து பேசி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாமக தலைமையில் கூட்டணி அமையும். அப்போது அனைவரும் சேர்த்து ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் வாழ்த்துக் கூறியுள்ளோம். பாமக தலைமையில் கூட்டணி அமையும் என்றால் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று அர்த்தமல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும் அடுத்த 10,15 ஆண்டுகளுக்கு எந்த கட்சியும் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியாது. எங்கள் இலக்கு என்பது 2026 இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தான் என்றும் தெரிவித்தார்.பாமக தலைமையில் கூட்டணி என்றால் பாமக 3 வது கூட்டணிக்கு முயற்சிக்கிறதா? என்ற சந்தேகமும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.