அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என்று எல்லோரும் பணிபுரியும் சமயங்களில் தங்களுடைய பணிகளை நிறுத்தி வைத்துவிட்டு கைப்பேசிகளில் தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களிடமோ, அல்லது நண்பர்களிடமோ அரட்டை அடித்துக் கொண்டிருப்பது வழக்கமாக நடைபெற்று வரும் ஒரு செயலாகும்.
அரசு அலுவலகங்களில் சென்று ஏதாவது ஒரு கையெழுத்து வாங்க வேண்டும் என்றாலும் கூட தொலைபேசி மூலம் அடுத்தவர்களிடம் பேசிக்கொண்டே அதிகாரிகள் கையொப்பமிடும் செயலும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது ஒரு உத்தரவு வெளியாக இருக்கிறது.
அதாவது பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் கைபேசியை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதோடு அரசு அலுவலகங்களில் பணி நேரத்தின்போது தொலைபேசியில் உரையாடுவது, கைப்பேசி கேமராக்களை பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது குறித்து அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும், ஏதாவது அவசர காரணம் இருந்தால் முறையான அனுமதி பெற்று கைபேசியை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், பணி நேரத்தில் காவல் துறையை சேர்ந்தவர்கள் கைபேசியை பயன்படுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆவடி காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பணி நேரத்தில் காவல் துறையை சேர்ந்தவர்கள் கைபேசியை பயன்படுத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இந்த உத்தரவை மீறி கைபேசி பயன்படுத்தும் காவல்துறையினர் மீது அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.