Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

போலீஸ் கணவர் மீது உருவான சந்தேகம்! 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய் – சேலத்தை உலுக்கிய சம்பவம் 

Police Wife Suicide attempt with children in Salem

Police Wife Suicide attempt with children in Salem

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் வசித்து வரும் காவல் அதிகாரியின் மனைவி கணவர் மீதுள்ள சந்தேகத்தால் 2 குழந்தைகளுடன் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் கோவிந்தராஜ் என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சங்கீதா மற்றும் ரோகித், தர்ஷினி என்ற 2 குழந்தைகளுடன் கொண்டலாம்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். மேலும் குழந்தைகள் இருவரும் நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று சங்கீதாவின் அண்ணா இவருக்கு போன் செய்து ரொம்ப நேரம் ஆகியும் எடுக்காத காரணத்தால் அப்போது பணியில் இருந்த கோவிந்தராஜூவுக்கு அழைத்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த கோவிந்தராஜூவுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் இரு குழந்தைகளுக்கும் விஷ மாத்திரைகளை கொடுத்து விட்டு பின்னர் தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சங்கீதாவுக்கு கணவர் கோவிந்தராஜ் மீது வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகம் இருந்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு நடந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரியின் மனைவியே இப்படி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version