தமிழகத்தில், மோட்டார் வாகன சட்டங்களை மீறி, அரசியல் கட்சியினரும், அவர்களின் ஆதரவாளர்களும் விதிவிலக்காக செயல்படும் நிலை தொடர்கிறது. குறிப்பாக, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் பிற கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சொகுசு வாகனங்களில் அதிவேகமாகச் செல்லுவதுடன், விதிகளை முற்றிலும் மீறுகின்றனர். இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
அதேபோல், அரசியல் கட்சி உறுப்பினர்கள், தங்களது வாகனங்களில் கட்சி கொடியை கட்டிக் கொள்வது, பதவி பெயர் பலகைகளை வைக்கிறார்கள். மேலும், சிவப்பு, நீலம் போன்ற கண்ணைக் கவரும் எல்.இ.டி. விளக்குகளை பொருத்துவது போன்ற செயல்களும் நடைமுறையில் அதிகரித்து வருகின்றன. இது மோட்டார் வாகன சட்ட விதிகளை முழுமையாக மீறும் செயல் என்பதையும், இதனால் பொதுப்போக்குவரத்து தடங்கலடைவதையும் காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றனர்.
மோட்டார் வாகன சட்டப்படி, எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும், அரசியல் கட்சி உறுப்பினர்களுக்குமான விதிவிலக்குகள் இல்லை. வாகனங்களில் கட்சி கொடி, பதவி பெயர் பலகை வைப்பது, விதிமீறலாகும். இதுபோன்ற முறைகேடுகளுக்கு எஸ்.ஐ. அதிகாரிகள், சோதனையின்போது உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளை தண்டிக்கலாம். மேலும், அதிகபட்ச அபராதத்தையும் விதிக்கலாம் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.
ஆனால், நடைமுறையில், அரசியல் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கும்போது, அவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வரும். சில முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் தலையீடு மற்றும் அழுத்தம் காரணமாக, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றனர். இதனால், விதிகளை மீறும் தனிநபர்களைச் செய்தபோல், கட்சி சார்ந்த வாகனங்களுக்கு வழக்கமாக அபராதம் விதிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
போக்குவரத்து விதிகளை மீறி, கட்சி கொடி, பதவி பெயர் பலகை கொண்டு செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் சாலையில் கட்டுப்பாடற்றபடி பயணிக்கின்றன. இவை விபத்துகளுக்கும் முக்கியக் காரணமாக இருக்கின்றன. சில விபத்துக்களில் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். கூடுதலாக, விதிகளை மீறுபவர்களுக்கு திருத்தலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதிகாரிகள் தன்னிச்சையாக சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரத்தை பெற்றால், அரசியல் கட்சிகளின் போக்குவரத்து மீறல்களை கட்டுப்படுத்தலாம்.
அதிகபட்சமாக அபராதத் தொகையை உயர்த்துவது, பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம், அனைவருக்கும் சமமான போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு, சாலையில் ஒழுங்குமுறை நிலவ உதவும்.