Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டோக்கன் வழங்கும் பணி இன்னும் முடிவடையவில்லை! நாளை முதல் பொங்கல் பரிசு வழங்க திட்டம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 2 கோடிக்கும் அதிகமான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சென்ற நவம்பர் மாதம் அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், துணிப்பை, உட்பட ஒட்டுமொத்தமாக 21 பொருட்கள் ஜனவரி மாதம் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 505 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட இருக்கின்ற சூழ்நிலையில், இந்த திட்டத்துக்காக தமிழக அரசு 1088 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்கி வருகிறார்கள், அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு பெறுவதற்கான தேதி, நேரம், உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கிறது டோக்கன் வழங்கும் பணி இன்னும் நிறைவு பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, இன்று பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில், தற்சமயம் நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. டோக்கன் வழங்கும் பணி இன்றுடன் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழ்நிலையில், நாளை தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரையில் டோக்கன் படி பொங்கல் பரிசு விநியோகிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் பெற முடியாதவர்கள் பண்டிகை முடிந்த பிறகு கூட பெற்றுக் கொள்ளலாம் என்று உணவு வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், பொங்கல்பரிசு வழங்கப்படுவதை கண்காணிப்பதற்காக மண்டல வாரியாக தமிழகம் முழுவதும் 12 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாகவும், ஆய்வு செய்யும் தமிழக அரசு, அதற்கான உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது

Exit mobile version