இன்று முதல் தொடங்கும் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!
பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை அனைத்து மக்களும் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம் தான்.அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது.
அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் தரமற்றதாக இருந்தது என பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றாச்சாட்டு எழுந்து வந்தது.அதனால் நடப்பாண்டில் பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ரூ 1000 ரொக்கம் மற்றும் பச்சரிசி,சர்க்கரை வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.அந்த கோரிக்கையை ஏற்று ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று முதல் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன் விநியோகம் தொடங்கி உள்ளது.
நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று முதல் வரும் எட்டாம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரம் மற்றும் தேதியில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்கலாம் என புகார் எண் வழங்கப்பட்டுள்ளது.மேலும் ஒவ்வொருவரும் பரிசு தொகுப்பு பெற்றவுடன் அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.