2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே அவருடைய கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வாதம் செய்தது இதே அதிமுக அரசுதான் என்று பொன்முடி தெரிவித்திருக்கின்றார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2000ஆம் வருடமே ஆணை பிறப்பித்தது திமுக ஆட்சியில்தான். உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்த ஒரு வருடத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது ஞாபகம் இருக்காது 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் இவர்களுடைய கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என வாதம் செய்தது இது அதிமுக அரசுதான்.
இப்போது 30 வருட காலமாக சிறையில் இருக்கின்ற நேரத்தில் 7 பேரின் விடுதலையில் எல்லாவிதமான குழப்பங்களையும் செய்திருப்பது நீங்கள் தான். உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் ஆறு வருடங்களாக இவர்களுடைய விடுதலையை தாமதம் செய்து வைத்திருப்பதும் நீங்கள்தான்.
முதலில் 2014ம் ஆண்டு தேர்தலுக்காக அந்த ஏழு பேரின் விடுதலையில் மத்திய அரசிற்கு மூன்று நாள் கெடு விதித்து இவர்களுடைய விடுதலையை தாமதம் பண்ணியது அதிமுக அரசுதான்.
இப்பொழுது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, இரண்டு வருடம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது எங்கள் கழகத்தலைவர் கோரிக்கையை வைத்த பின்பு பதறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
தங்களுடைய அமைச்சரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, ஆளுநரிடம் அனுமதி வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு திமுக குறித்து குற்றம்சாட்ட எந்த ஒரு தகுதியும் இல்லை.
தயவுசெய்து இதிலும் கீழ்த்தரமான அரசியல் செய்யாமல் நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று வாருங்கள், ஆளுநர் அவர்களை வலியுறுத்தி 7 பேரின் விடுதலைக்கு உடனடியாக ஒப்புதல் வாங்குங்கள் என்று முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.