செம்பருத்தி, மௌனராகம் போன்ற மக்கள் அதிகமாக பார்க்கும் சீரியல்களில் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு காட்சிகளை ஒளிபரப்பினால் மக்கள் நிறைய பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு வரும் என்று டாக்டர் ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வு நகரங்களில் உள்ள மக்களிடம் ஏற்பட்டுள்ளதே தவிர கிராமங்களில் உள்ள மக்களிடம் கொரோனா தடுப்பூசியின் விழிப்புணர்வு யாருக்கும் தெரிவதில்லை. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தினமும் வீடியோ வெளியிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி வருகிறார்.
மேலும் திரைப்பட பிரபலங்கள் சிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் போன்றவர்களும் முகக்கவசம் அணிவதை பற்றியும், கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதேபோல் தொலைக்காட்சியில் வரும் சீரியல் தொடர்களிலும் கூட மிகப் பிரபலமானவர்கள் முக கவசம் அணிவது பற்றியும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அதன் அவசியத்தைப் பற்றியும் தாங்களாகவே முன்வந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் மற்றும் வலைதளங்களில் சொல்லப்படும் செய்திகள் எதுவும் மக்களிடம் அதிகமாக போய் சேரவில்லை. நகர்ப்புறங்களில் ஏற்படும் விழிப்புணர்வு கிராமப்புறங்களில் ஏற்படுவதில்லை. அதுவும் கிராமப் புறங்களில் உள்ள முதியோர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது என்றாலே பயந்து நடுங்குகிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று அவர்களாகவே யூகித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறார்கள்.
மிக பிரபலமான தொலைக்காட்சி சீரியல் தொடர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வது போல் சீன்கள் வைத்தால் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் என்று நல்ல ஐடியா ஒன்றை டாக்டர் சொல்லி உள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த ராஜ்மோகன் வெளியிட்ட பதிவில். “செம்பருத்தி, மவுனராகம் இந்த மாதிரி சீரியலில் கோவிட் தடுப்பூசி போட்டுக்குற சீன் வச்சா பாதி பேர் போய் போட்டுக்குவாங்க” என்று கூறியுள்ளார்.
இவர் சொல்லுவதையும் பார்த்தால் ஒரு பக்கம் நல்ல ஐடியாவாக தான் இருக்கிறது. சன் டிவி,விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் டிவி போன்ற தொலைக்காட்சியில் வெளிவரும் நாடகங்களில் ஹீரோ ஹீரோயின்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் போல் நடித்து ஒளிபரப்பப்பட்டால் பாமர மக்களும் அதன் அவசியத்தை உணர்ந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.