திமுக போட்ட புதிய வழக்கு! தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
125

தபால் ஓட்டுக்கள் சம்பந்தமாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 80 வயதிற்கு அதிகமானோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள், தபால் வாக்கு அளிக்கும் முறையை அமல்படுத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு போடப்பட்டது.

அந்த வழக்கில், தபால் வாக்குகளை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் கொடுக்க வேண்டும் என விதி இருப்பதால், முறைகேடுகளும் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காகப் போராடும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக், மற்றும் 86 வயது முதியவர் துரை போன்றோரும் வழக்கு தொடர்ந்திருந்தார். கல்ல ஓட்டுக்கு வழிவகுக்கும் முறை என்ற காரணத்தால் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இவ்வழக்குகளில் வலியுறுத்தப்படுகிறது.

இவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி, அமர்வு முன்பாக நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், புதிய நடைமுறையை காரணமாக, ரகசியமாக வாக்களிக்கும் முறை பாதிக்கப்படும். 30% நபர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய கூடும் என்று தெரிவித்தார். தேர்தல் அறிவிப்பு வெளியிட்டுவிட்டால் நீதிமன்றம் தலையிட இயலாது என்ற காரணத்தால், முன்கூட்டியே உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

டிசம்பர் 3 இயக்கம் சார்பாகவும் இதே கோரிக்கை நீதிபதியிடம் முன்வைக்கப்பட்டது. துரை சார்பாக சட்டசபைத் தேர்தல் நெருங்க இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டு இருக்கிறார்கள்.

எல்லா தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தரப்பின் கருத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பித்து விட இயலாது என்று மறுத்து விட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக நான்கு வாரங்களில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.