வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்

0
290
Onion Price Hike-News4 Tamil Online Business News in Tamil

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்

வெங்காயத்தை தொடர்ந்து அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சில பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெங்காயம் பெருமளவில் விளையும் மாநிலமான மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்திருந்தது. அதாவது அந்த பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் எதிர்பார்க்காத அளவிற்கு மழை பெருமளவு கொட்டித் தீர்த்தது.

கடந்த மாதத்தில் பருவம் தவறி பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையிலிருந்த வெங்காயப் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விளைவித்த விவசாயிகளுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் போதிய அளவில் வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் கட்டுக்கடங்காத அளவில் உயர்ந்தது.

மேலும் நாட்டின் பல்வேறு நகரங்களில் பெரிய வெங்காயத்தின் விலையானது சில்லறை விற்பனையில் அதிகபட்சமாக 120 ரூபாய் வரையிலும் விற்பனையானது. இதனால் வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பதுக்கல் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உத்தரவிட்டன. மேலும் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு வெளி நாடுகளிலிருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஆரம்பித்தது.

இதனால் வெங்காயத்தின் விலை சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. அதாவது தற்போது சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.

வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்த தொடங்கியது. இதனையடுத்து எகிப்து, துருக்கி போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

இந்தநிலையில் வெங்காயத்தை தொடர்ந்து தற்போது உருளைக்கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது. உருளைக்கிழங்கு பயிரிடும் முக்கிய மாநிலங்களான பஞ்சாப், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் பருவம் தவறிய மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உருளை கிழங்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன.

இதனால் அங்கு விளைச்சல் குறைந்துள்ளதால் இதனையடுத்து உருளை கிழங்கு விலையும் தற்போது உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது டெல்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கடந்த மாதம் இந்த மாநிலங்களில் உருளை கிழங்கு விலை சராசரியாக வெறும் 12 ரூபாய் என்ற அளவில் இருந்தது. தற்போது போதிய அளவில் உருளை கிழங்கு வராததால் இந்த விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அறுவடை முடிந்த உருளை கிழங்கு வருகின்ற ஜனவரி மாதத்தில் சந்தைக்கு வரும் என்பதால் இந்த விலையானது அப்போது குறையும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வெங்காய விலை ஏற்றதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உருளைக் கிழங்கு விலை உயர்வு பெரும் சோதனையாக அமைந்துள்ளது.