கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள உருவாக்கப்பட்டிருக்கும் அதி நவீன கவசம்

0
116

கொரோனாவால் ஒரு பக்கம் அவதிகளும், இறப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், மற்றொரு பக்கம் பல புதிய கண்டு பிடிப்புகளில் வல்லுநர்கள் பரபரப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாம் நேற்று நவீன முக கவசத்தை பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் டொரோன்டோவை சேர்ந்த VYZR டெக்னாலஜிஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனம் BioVYZR எனும் பெயரில் நவீன கவசம் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது கொரோனா உட்பட அனைத்து வித கிருமி தொற்று, நச்சுக் காற்று உட்பட பலவற்றிலிருந்து மனிதர்களை காக்கும் என கூறியுள்ளனர்.

நாம் எடுத்து செல்லும் பேக் பேக்கை போல அணியக்கூடிய இந்த கவசம் உள்ளது. 360 டிகிரி பாதுகாப்பு தரும் உபகரணமாகக் கூறப்படும் இதில் N-95 ஃபில்டர்கள் பொருத்தப்பட்டிருப்பதுடன் இதில் இனைக்கப்பட்டிருக்கும் ஏர் ப்யூரிஃபையர் (Air Purifier) கிருமிகளை அழிப்பதுடன், சுவாசிக்கும் தூய்மையாக்கும் என கூறுகின்றனர். சுமார் 1.25 கிலோ எடையுடைய இந்த கவசம் எந்த காலமாற்றத்தையும் தாங்கும் வகையும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

புழுக்கத்தை தவிர்க்கும் விதமாக இதில் ஒலி எழாத சிறிய மின் விசிறி பொருத்தப்பட்டுள்ளதாம். ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் இனைக்கப்பட்டுள்ள இந்த மின் விசிறி, ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை இயங்கும் வசதி கொண்டதாம்.

இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 13,017 ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது.

சரி இது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என கேட்கிறீர்களா?

indiegogo எனும் பணத்தை சேகரிக்கும் தளத்தில் மே 12ம் தேதி இதை பட்டியலிட்டுள்ள இதன் வடிவமைப்பாளர்கள் இந்திய ரூபாய் மதிப்பில் 17 லட்சத்து 87 ஆயிரத்து 4088 ரூபாய் இருந்தால் இதனை உருவாக்கிட முடியும் கூறியுள்ளனர். இது வரை கிட்டத்தட்ட 12 லட்ச ரூபாய் அளவிற்கு இதற்கு பணம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் முழு பணத்தையும் இவர்கள் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தளத்திலேயே இதற்குப் பலரும் முன் பதிவு செய்துள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு இதை அனுப்பியவுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.