தமிழக அரசின் சார்பில் மக்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களுக்குக் கூடுதலான சலுகைகள் தமிழக அரசு அளிக்கிறது. இதனால் 60 வயதிற்கு மேற்பட்டோர் பெரிதும் பயனடைகின்றனர்.
அந்த வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் “பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டமும் தமிழகத்தில் இணைந்துள்ளது. பயனாளிகளின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன் பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.2 லட்சம் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் 1 கோடியே 45 லட்சம் குடும்பங்கள் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் நோக்கமே ஏழைகளுக்கும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். காலப்போக்கில் இந்தத் திட்டம் அரசு மருத்துவமனைகளுக்கும் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் ஒரு சில காரணங்களைக் கூறி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை மறுக்கின்றது. குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்போம் என்று சில தனியார் மருத்துவமனைகள் கூறுவதாக செய்தி வந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்தத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் மூலமாக மூத்த குடிமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வருமான வரம்பு இல்லாமல் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. இதனால் காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் முதியோர்கள் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய தமிழ்நாடு சுகாதார சீர்திருத்த திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், “தமிழகத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசின் செயல்பாட்டிற்காக காத்துள்ளோம். இந்தத் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டிருக்கும் 70 வயதிற்கும் மேற்பட்டவர்களும் இந்தப் புதிய திட்டத்தில் பயன்பெற முடியும். அதைப்போல், புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படும் மூத்த குடிமக்களுக்கும் இந்த திட்டத்தில் பயன் உள்ளது.
இன்சூரன்ஸ் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் செலுத்தும் தொகை குறைவாக உள்ளதால், மீதமுள்ள தொகையை தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புகிறார்கள். இந்தத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால்தான் மூத்த குடிமக்கள் சிரமமின்றி சிகிச்சை பெற முடியுமா என்பது தெரியவரும்” என்று கூறியுள்ளார்.
தமிழக அரசு ஒவ்வொரு மக்களையும் கருத்தில் கொண்டு தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வருகின்றது. இதனால் பல மக்கள் பயன் பெறுகின்றனர். மேலும், திட்டங்களை மறுபரிசீலனை செய்து மக்களுக்கு அளித்தால் நன்றாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.