எம்.பி பதவி கேட்டும் கிடைக்கவில்லை! நிம்மதிக்காக கோயிலில் பூஜை நடத்திய பிரேமலதா விஜயகாந்த்!!
அதிமுக கட்சியிடமிருந்து மாநிலங்களவை எம்பி பதவி கேட்டு தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினரிடையே பெரும் போட்டி நடந்தது. இதனால் அதிமுகவிடம் எங்களுக்கு எம்பி சீட் தர வேண்டும் என்று தேமுதிக வலுவான கோரிக்கை வைத்தது. இதனை விளக்கும் விதமாக தமிழக முதல்வர் கூட பேசியிருந்தார்.
அதாவது, கூட்டணிக் கட்சிகள் குடைச்சல் கொடுப்பதை விளக்கும் வகையில் எடப்பாடி பதில் கூறினார். வீட்டில் அழகான பெண் இருப்பது தெரிந்தால், பலரும் பெண் கேட்டு வருவது சகஜம்தான் என்றும், பெண்ணை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்களே முடிவு செய்வார்கள் என்றும் கூறிவிட்டு அதுபோல், அ.தி.மு.க.விடம் நாடாளுமன்ற மேலவை சீட் கேட்டு வந்த கூட்டணி கட்சிகளை பற்றி கூறியிருந்தார்.
இதனையடுத்து, தேமுதிக கேட்டிருந்த எம்பி பதவி கிடைக்காத நிலையில், அப்பதவி ஜி.கே.வாசனுக்கு தரப்பட்டது. பிரேமலதா ஆன்மீகத்திலும், கடவுள் பக்தியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நினைத்த காரியம் கைகூடாத நிலையிலும் பெரும் அதிருப்தியில் இருக்கும் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டனின் உடல்நிலை ஆரோக்கியம் மேன்மை அடையவும், அரசியல் ஏமாற்ற வருத்தங்களை களைத்து நிம்மதியை வேண்டியும் வளசரவாக்கம் காமாட்சி அம்மன் கோயிலில் பூஜை நடத்தி வழிபாடு செய்தார். பூஜையில் தனது தம்பி மற்றும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.