அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவதாக அறிவித்த தேமுதிக உடனடியாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாத நிலையில், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயாந்த் மட்டுமே போட்டியிடுவதாக வேட்பாளர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டது.
கணவர் விஜயகாந்த் முதன் முறையாக வெற்றி வாகை சூடிய இடம் என்பதால் தானும் சென்டிமெண்டாக முதன் முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். விஜயகாந்திற்கு கடலூர் மாவட்டத்தில் அதிக அளவிலான ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பதாலும் அங்கு களமிறங்குவது தனக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக நம்புகிறார். இந்நிலையில் பிரேமலதாவின் தம்பியும், தேமுதிகவின் தளபதியுமான எல்.கே. சுதீஷுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .
இதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட அவர், தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.அடுத்ததாக சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தான் நேற்று கடலூரில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்தை அணுகிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொண்டனர். பிரசாரம் செய்யச் சென்ற இடத்திற்கே வந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்யச் சொன்னதால் டென்ஷன் ஆன பிரேமலதா பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிக்க சற்றே சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் பிரச்சாரத்திற்கு எதுவும் சிக்கல் வந்துவிடக்கூடாது என தேமுதிக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதை அடுத்து உணவு இடைவேளையின் போது கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி பிரேமலதா விஜயகாந்திற்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் தேமுதிக தொண்டர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.