மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

0
181

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் இன்னும் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அம்மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதால் சிவசேனா உள்ளிட்டஅரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இன்று மதியம் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்புக்கு உட்பட்டு மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356வது பிரிவின் சரத்துகளை அடிப்படையாகக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்

தனிப்பெரும் கட்சியான பாஜக, இரண்டாவது இடத்தை பெற்ற சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தனித்தனியே ஆட்சி அமைக்க ஆளுனர் அழைப்பு விடுத்தார். ஆட்சி அமைக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று பாஜக தெரிவித்துவிட்ட நிலையில் தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதைக் காட்ட ஆளுநர் தங்களுக்கு வழங்கிய காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று சிவசேனா கோரிக்கை விடுத்தது. ஆனால் ஆளுனர் அவகாசம் கொடுக்க மறுத்துவிட்டார். அதேபோல் இன்று இரவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவும் முடிவடைகிறது

இதனையடுத்தே மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுனர் பரிந்துரை செய்துள்ளார். மேலும் மத்திய அமைச்சரவையும் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து கடிதம் கொடுத்துள்ளது. இந்த கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது