Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் – பிரதமர் மோடி

#image_title

அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் – பிரதமர் மோடி

குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார்.

இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் புபேந்திர பட்டேல், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன்,நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் வணக்கம் சௌராஷ்ட்ரா வணக்கம் தமிழ்நாடு என தமிழில் கூறி தனது உரையை துவங்கினார்.

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதாகவும் குஜராத் மண்ணில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோதி தமிழிலேயே குறிப்பிட்டார்.

சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் என்பது வெறும் குஜராத் மற்றும் தமிழகத்திற்கு இடையிலான சங்கமம் மட்டுமல்ல என தெரிவித்த பிரதமர் குஜராத்தில் உள்ள நாகேஸ்வரரும் மதுரையில் உள்ள சுந்தரேஸ்வரரின் சங்கமம் என்றும் நர்மதை மற்றும் வைகையின் சங்கமம் என்றும் துவாரகா மற்றும் மதுரை என்ற புண்ணிய பூமியின் சங்கமம் என குறிப்பிட்டார்.

பன்முகத் தன்மையை கொண்டாடும் நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர் பல்வேறு மொழிகள், உச்சரிப்புகள் கலைகள் போன்றவற்றை நாம் கொண்டாடி வருவதாகவும் இந்த வேறுபாடுகள் நம்மை பிளவு படுத்தாமல் நம் பிணைப்பை வலுப்படுத்தி உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

பல்வேறு ஓடைகள் ஒன்று சேரும்போது சங்கமம் உருவாவதை நாம் அனைவரும் அறிவோம் என தெரிவித்த பிரதமர் பல நூற்றாண்டுகளாக இந்த பாரம்பரியத்தில் நாம் வளர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

2047 க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறி செல்ல வேண்டும் என தெரிவித்த பிரதமர் நாம் செல்லும் அந்த வழியில் நம்மை பிளவுபடுத்தவும் தவறாக வழி நடத்தவும் சில சக்திகள் முயற்சிக்க கூடும் என்றும் சிக்கலான காலகட்டங்களில் கூட புதுமை நிகழ்த்துவதற்கான சக்தி இந்தியாவிடம் இருப்பதாக பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

கலாச்சார மோதலை வலியுறுத்தாமல் வேறுபாடுகளை காணாமல் உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்படுத்தி ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்த பிரதமர் இந்தியாவின் அழியா பாரம்பரியம் இதுவே எனக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒற்றுமை என்ற கொண்டாட்டம் லட்சக்கணக்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்ட கனவை நிறைவேற்றி வருவதாக தெரிவித்த பிரதமர் அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமையும் அதிகரிக்கும் என பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

Exit mobile version