கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு

Photo of author

By Parthipan K

கை குலுக்கலா? கருப்பு பலூன்களா? என்ன நடக்கும்? எதிர்பார்ப்பு எகிறும் ஏக டென்ஷனில் மாமல்லபுரம் சந்திப்பு
 
மாமல்லபுரம்: உலக நாடுகள் உற்று பார்க்க முனைந்திருக்கும் சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பை தமிழக அரசியல்கட்சியினர், மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ஏக சஸ்பென்சாக இருக்கிறது. கருப்பு பலூன்களா? அல்லது கை குலுக்கலா என அனைவரும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
 
தமிழகத்துக்கும், கருப்புக்கும் முக்கிய தொடர்புகள் உண்டு. அது போன்று இல்லாமல் அதற்கு இணையான தொடர்பு பிரதமர் மோடிக்கும், கருப்புக்கும்  உண்டு. குறிப்பாக தமிழகத்தில். ஒவ்வொரு முறையும் அவர் தமிழகம் வரும் போது எல்லாம் வானத்தில் கருப்பு பலூன்களும், மண்ணில் கருப்புக் கொடிகளும் கச்சை கட்டி நிற்கும்.
 
அதற்கு பல உதாரணங்கள் உண்டு. 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம்12ம் தேதி.. பேரறிஞர் அண்ணாவின் சொந்த மாவட்டமான காஞ்சியில் திருவடந்தையில் ராணுவ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது தமிழகம் வந்தார் பிரதமர் மோடி. பாஜக, அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் ஒரு சேர நின்று, அவரை ஏகத்துக்கும் எதிர்த்தன.
 
#GoBackmodi என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆனது. தலைநகர் சென்னை, பின்னர் நாடு முழுவதும் என்று முதலிடத்தில் டிரென்டான இந்த எதிர்ப்பு, உலகம் முழுவதும் பரந்து விரிந்தது. கட்சியினர் மட்டுமின்றி பல தரப்பினரும் மோடியின் தமிழக வருகையை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்தனர்.
 
பின்னர் 2019ம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, அதே ஆண்டு பிப்ரவரியில் திருப்பூர் பொதுக்கூட்டம், மார்ச் 1ல் கன்னியாகுமரி, மார்ச் 6 வண்டலூர் என தமிழகம் வந்து மோடிக்கு கருப்பு பலூன்களுமே, கருப்புக் கொடிகளுமே சாமரமாயின. இது எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட, அநாகரிகமற்ற செயல் என்று பாஜக கூவி தள்ளியது.
 
ஆனாலும், எதிர்ப்பின் வேகம் குறையவில்லை. அதற்கு மிக சமீபத்திய உதாரணம்.. செப். 30ம் தேதி சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவுக்கு மோடி வந்த போதும் கருப்பு எதிர்ப்பு என்று வர்ணிக்கப்பட்ட கோபேக் மோடி இணையத்தில் டிரென்டானது. உலகளவிலும் அனைவர் கவனத்தை ஈர்த்தது.
 
இப்போது அதேபோன்றதொரு நிலைக்கு தமிழகம் வந்துவிடுமா என்று எதிர் பார்ப்பு ஏகத்துக்கும், கிளம்பி இருக்கிறது. காரணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜிங்பிங், பிரதமர் மோடி சந்திப்பு.

மோடி, ஜிங்பிங் சந்திப்பதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி அழைப்பில்,ஜிங்பிங் நாளை சென்னை வருகிறார். 12ம் தேதியும் மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

சந்திப்பில், இருநாட்டு உறவுகள் மேம்பாடு, சர்வதேச பிரச்சனைகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் ஆலோசிக்கப்படுகிறது. மாமல்லபுரத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சந்திப்பு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மோடியின் தமிழக வருகை எப்படி இருக்கும், தமிழக மக்கள் அதனை எதிர்கொள்ளும் மனநிலை என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. கருப்பு பலூனா அல்லது கைகுலுக்கலா என்று தெரியாத நிலை காணப்படுகிறது. தாய்நாடு மட்டுமல்ல, அதனை காண உலக நாடுகளும் காத்திருக்கின்றன.

Exit mobile version