Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர்

பாமகவை சீண்டிய தவெக தொண்டர்கள்! கொதித்தெழுந்த சேலம் பாமகவினர்

நடிகர் விஜய் புதியதாக ஆரம்பித்துள்ள கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த மாதம் 27 ஆம் மாநாடு நடைபெறவுள்ளது. அந்த வகையில் இதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாடு நடைபெறவுள்ள விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அதே போல நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு வரும் என மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர்.ஏற்கனவே கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒரு சில தேர்தல்களில் திமுக பக்கம் சாய்ந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியை சேர்ந்தவர்கள் கொடிக்கம்பம் நடும் விவகாரத்தில் பாமகவினருடன் விவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எருமபாளையம் அருகே கடந்த 35 ஆண்டுகளாக பாமகவின் கொடி கம்பம் நிறுவப்பட்டு அக்கட்சியினர் அதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் தவெக தொண்டர்கள் பாமக கொடிக்கம்பத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இது குறித்து காவல்துறையிடம் பாமகவினர் புகார் அளித்துள்ளனர். ஆனால் பாமகவினர் அளித்த புகாருக்கு காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பாமக கொடிக்கம்பம் இருந்த இடத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் மீண்டும் கொடிக்கம்பத்தை நிறுவ முயற்சித்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அங்கு பாமக கொடிக்கம்பத்தை நட கூடாது என தடுத்துள்ளனர். இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாமகவினர் எங்களை சீண்டாதீர்கள் என நடிகர் விஜய்க்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தொண்டர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

Exit mobile version