உடல்பருமனால் பெண்கள் சந்திக்கும் சவால்களும் அதன் தீர்வுகளும்
ஹோமேக்கர்களாக இருக்கும் இல்லாத்தரசிகள்தான், உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், வேளைக்கு செல்லும் பெண்கள் அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறது.உடல் பருமன் பிரச்சனைக்கு, அந்த வித்தியாசம் எதுவும் கிடையாது.வீட்டில் இருப்பவர்களோ,வேலைக்கு செல்பவர்களோ படித்தவர்களோ,படிக்காதவர்களோ- நீங்கள் யாராக இருந்தாலும் சரி உங்கள் உணவு பழக்கம் சரி இல்லை என்றால், உடல் பருமன் பிரச்சனை கண்டிப்பாக உங்களை தாக்கும்.
திருமணத்துக்கு முன் குண்டாக இருப்பவர்கள்,உணவைக் குறைப்பது, உடற்பயிற்சி செய்வது போன்ற,குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட பரிந்துரைகளையே கடைப்பிடிக்கலாம். அதோடு,கொழுப்பு நிறைந்த உணவைக் குறைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கவேண்டும்.சைவப் பிரியர்கள் என்றால், தயிர் ,வெண்ணெய்,நெய் ,எண்ணெய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவையெல்லாம், உடலிலுள்ள கொழுப்பின் அளவை அபிரிமிதமாக உயர்த்திவிடும். நெய்யில் வறுத்து,பொரித்து என எதையுமே தொடாமல் இருப்பது உத்தமம். மேலும், மிக முக்கியமாக, அரிசி சார்ந்த உணவு வகைகளை அளவோடு சாப்பிடுவதன் மூலமாகவும் எடையை குறைக்க முடியும்.அசைவ பிரியர்கள்,அவர்கள் சாப்பிடும் அசைவ உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.
பொதுவாக பெண்கள் பிரசவத்தின் போதுதான் அதிகமாக குண்டாகிறார்கள்.கருத்தரிப்பதற்கு முன்பு இருந்த எடையைவிட 10 கிலோ வரை கூடுவது நல்லது.ஆனால் அதற்கு பிறகு அவர்கள் உடல் எடையை குறைக்க முயற்சிப்பது இல்லை .குழந்தைக்கு 3 வயதாகி பள்ளியில் சேர்த்த பிறகு, அவர்கள் உணவுபழக்கம் மாறி விடுகிறது. அப்போது பல தாய்மார்கள் காலை உணவைத் தவிர்த்துவிடுவார்கள். அடிக்கடி டீ,காபி குடித்துவிட்டு வேலை செய்வார்கள்.குழந்தையை பள்ளிக்கு அனுப்பிய பிறகு, சமையல், துணி துவைத்து போன்ற எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஒரே வேளையாக மதிய உணவை சாப்பிடுவார்கள்.இந்த பழக்கம்தான்,அவர்கள் குண்டாவதற்கு எடுத்துவைக்கும் முதல் படி என்று அவர்களுக்கு தெரியாது.
தாய்மார்களின் உடல் குண்டாவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. தங்களுக்கு தேவையான அளவு உணவை முதலில் சாப்பிட்டுவிடுவார்கள். பின் எல்லோரும் சாப்பிட்ட பிறகு மீதமாகும் உணவை, வீணாகிவிடுமோ என்று அதையும் சாப்பிட்டு விடுவார்கள் இதனாலும் உடல் எடை அதிகரிக்கும்.வயிறு ஒரு குப்பைத் தொட்டியில்லை என்பதைத் தாய்மார்கள் உணர வேண்டும் .இரவில் வெகுநேரம் டிவி பார்த்துவிட்டு சாப்பிடுவது போன்றவற்றை தவிர்க்கவும். காய்கறிகள்,பழங்கள் அடங்கிய உணவை பெரியவர்கள் சாப்பிட்டு வர சிறியவர்களும் அவற்றை ருசித்து சாப்பிட்டு பழகுவார்கள். இதனால் குடும்பத்திற்கும் நல்ல ஆரோக்யம் கிடைக்கும். எனவே இவற்றை பின்பற்றி தாய்மார்கள் தங்களையும் குடும்பத்தையும் வளம்பெற செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.