இந்த வகை மீன்களை விற்கவோ வாங்கவோ தடை:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

0
202

இந்த வகை மீன்களை விற்கவோ வாங்கவோ தடை:! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

 

மத்திய மற்றும் மாநில அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்ரிக்கன் கெளுத்தி வகை மீனை குளத்திலோ அல்லது பண்ணையிலோ வளர்ப்பதற்கும்,வியாபாரிகள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,அணை மீன், தேளி மீன், பெரிய கெளுத்தி மீன் எனப்படும் ஆப்ரிக்கன் கெளுத்தி ஆகியவைகள் வெளிநாட்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட மீன் வகைகளாகும்.

இந்த வகை மீன்கள் தனது உணவாக மற்ற மீன்களை உண்ணும் திறனுடையவை.
இதுமட்டுமின்றி ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் 8 ஆண்டிற்கும் மேலாக உயிர் வாழக்கூடியவை.இதனால் இந்த வகை மீன்கள் ஏரி அல்லது ஆறு போன்ற நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால், மற்ற மீன்களை உணவாக எடுத்துக் கொண்டு, நம் நாட்டின் பாரம்பரிய மீன் இனத்தையே அழிக்க கூடிய வல்லமை மிக்கது.

இது மட்டுமின்றி இந்த மீன்கள் மிகக் குறைந்த அளவு தண்ணீரில் விட்டாலும் மிகுந்த அளவில் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. எனவே இவற்றை அழிப்பது மிகவும் கடினமான செயலாகும்.மேலும் இந்த வகை மீன்களால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டால் நமது உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

இந்த வகை மீன்களை இயற்கை நீர்நிலைகளில் விடாமல்,
பண்ணைகள் அல்லது குளங்களில் விட்டு வளர்த்தால் மழைக்காலங்களின் போது ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இந்த வகை மீன்கள் இயற்கை நீர்நிலைகளில் கலந்து விடும் அபாயம் உள்ளதால்,ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்ப்பதற்கும் விற்பதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.மேலும் இந்த வகை மீன்களை மக்கள் வாங்குவதற்கும் தடை விதித்துள்ளது.எனவே அரசால் தடை செய்யப்பட்ட இவ்வகை மீன்களை விற்கவோ வாங்கவோ கூடாது என்றும் இதனை மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.