பாரதிய ஜனதா கட்சியை கொடுத்த நெருக்கடி காரணமாக, புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி சட்டசபையை கூட்டி கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று ரகசியமாக திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.
புதுவையில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 15 திமுகவிற்கு 2 மற்றும் மாகி தொகுதியை சேர்ந்த ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட 18 சட்டசபை உறுப்பினர்கள் பலத்துடன் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அமர்ந்தது. நாராயணசாமி முதலமைச்சரானார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களை நியமனம் செய்தது மத்திய அரசு. முதலமைச்சர் பதவியை நம்பியிருந்த நமச்சிவாயத்திற்கு ஏமாற்றம் கிடைத்த காரணத்தால், நாராயணசாமி முதலமைச்சரான அன்றைய தினம் முதல் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் அதிருப்தியிலிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. நமச்சிவாயத்திற்கும் முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கும், பனிப்போர் ஏற்படுவதை உணர்ந்த பாஜக நமச்சிவாயத்துடன் தொடர்பில் இருந்து வந்தது.
நாராயணசாமி முதலமைச்சர் ஆனதிலிருந்து நமச்சிவாயம் பாஜகவிற்கு தாவ போகின்றார்,என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு செல்லப் போகின்றார், ஆட்சியை கலைக்க போகிறார் என்று நாளுக்கு ஒரு வதந்தி உலாவி வந்தது.
நான்காண்டு கால வதந்திகளுக்கு முடிவு கட்டும் வகையில், அமைச்சர் நமச்சிவாயம், தீபாய்ந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரும் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றார்கள். அவர்களை அடுத்து மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார், ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தார்கள். பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேல் கட்சிக்கு எதிராக பேசுகின்றார் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார்.
இந்நிலையில் நமச்சிவாயம், பாஜகவை சார்ந்த நியமன சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அவர்களும் கடந்த 16 ஆம் தேதி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்தார்கள். அவர்களிடம் சில முக்கிய வேலைகளை கொடுத்தனுப்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த 16 ஆம் தேதியே என்ஆர் காங்கிரஸ், மற்றும் அதிமுக, அதோடு பாஜக போன்ற கட்சிகளின் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ராஜ் நிவாஸ் மாளிகைக்கு சென்று நாராயணசாமி அவர்கள் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஒரு மனுவை துணைநிலை ஆளுநர் தனிச்செயலாளர் தேவநீதிதாஸிடம் அளித்து வந்தார்கள்.
அந்த மனுவானது நேற்றைய தினம் காலை பொறுப்பேற்ற ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வைக்கு சென்றது .அந்த மனுவை ஆராய்ந்து பார்த்த அவர் முதல் அமைச்சர் நாராயணசாமி 22ஆம் தேதி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மூன்று நாள் கெடு விதித்து இருக்கின்றார்.
ஆரம்பத்தில் இருந்தே இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதல் அமைச்சர் நாராயணசாமி, தற்போது தன் வசம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக உரையாடி இருக்கிறார். இதன்படி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
எதிர்வரும் 22 ஆம் தேதி சட்டசபை கூட்டத்தை கூட்டி ஆட்சியை கலைப்பதற்காக சென்ற ஐந்து வருடகாலமாக பாரதிய ஜனதா கட்சி என்ன மாதிரியான நெருக்கடிகளை கொடுத்தது. பாஜகவின் ஜனநாயக படுகொலைகள் என்னென்ன என்று அனைத்தையும் எடுத்துக் கூறிவிட்டு முதலமைச்சர் நாராயணசாமி உள்பட எல்லோரும் ராஜினாமா செய்வது என்று திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள்.