Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கழிவறை மிக மோசமாக இருக்கிறது என்று நோயாளிகள் புகார் தெரிவித்ததை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் தாமாக முன்வந்து கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டு உள்ளது. இங்குள்ள சுகாதார வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லடி கிருஷ்ண ராவ், சென்றிருந்தார். அப்போது கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், அவரிடம் வார்டில் உள்ள கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்று புகார் அளித்தனர். இதனால் சுகாதார சீர்கேடு இருப்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

உடனடியாக கிருமிநாசினி மற்றும் கழிவறையை சுத்தம் செய்யும் பொருட்களை வரவைத்த அமைச்சர், தாமாகவே முன்வந்து கழிவறையை சுத்தம் செய்தார். மேலும், இதுகுறித்து அவர் கூறும்போது 75 நோயாளிகள் தங்கியிருக்கும் கொரோனா வார்டில் உள்ள கழிவறைகள் தினமும் மூன்று முறை சுத்தம் செய்யப்படுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையால் தூய்மை பணிகளை மேற்கொள்வதில் சற்று சிரமம் உள்ளது. எனவே வயது குறைவான கொரோனா நோயாளிகள் கழிப்பறையை உபயோகித்தப்பின்னர் அதனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா பணிகளை மேற்கொள்ள செவிலியர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள் என 458 பேரை புதுச்சேரி அரசு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்து வைத்துள்ளது என்று கூறினார். அவர்களை அடுத்த வாரத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version