சமீபத்தில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. இதில் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இதற்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும் கூட இந்தத் தேர்தல் பாஜகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
ஏனெனில் இதுவரையில் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமே இல்லாத ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.பஞ்சாப் மாநிலத்தில் இருக்கக்கூடிய 117 சட்டசபை தொகுதிகளில் சுமார் 92 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி.
இதனைத் தொடர்ந்து கடந்த 16ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பூர்வீக கிராமமான கட்கர் கலனில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு விழாவில் பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மான் பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவியேற்றப்பிறகு முதல் முறையாக பகவந்த் மான் நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இது தொடர்பாக பிரதமரின் அலுவலக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து முதலமைச்சர் பகவந்த் மான் தன்னுடைய வலைதள பக்கத்தில் வைத்திருந்த செய்திக்குறிப்பில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பஞ்சாப் மாநில பிரச்சினைகள் தொடர்பாக உரையாற்றினேன். பஞ்சாபிலுள்ள பிரச்சினைகளுக்கு மத்திய அரசிடமிருந்து தேவையான ஆதரவு கிடைக்கும் என்று உண்மையாக நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்