வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் இரு எம்.பி-களின் பதவி கேள்விக்குறி? மீண்டும் இடைத்தேர்தலா?
தமிழக சட்டமன்றத் தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற்றது.தேர்தலின் முடிவுகளை மக்கள் அதிக அளவு எதிர்பார்த்தனர். தொடர்ந்து பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியிலிருந்த நிலையில் மீண்டும் அ.தி.மு.க வருமா? அல்லது தி.மு.க. வருமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.அ.தி.மு.க வரும் என எண்ணியவர்களின் எண்ணத்திற்கு மாறாக தி.மு.க. 159 இடங்களில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. 75 இடங்களில் வெற்றி பெற்று பின்னடைவு அடைந்தது.அ.தி.மு.க. சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்தியலிங்கமும் வேட்பாளராக போட்டியிட்டனர்.இவர்கள் இருவரும் மாநிலங்களவை எம்.பி க்களாகவும் இருந்து வருகின்றனர்.தற்போது அ.தி.மு.க. வெற்றி பெற்று இருந்தால் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.
ஆனால்,தி.மு.க. வெற்றி பெற்றதால் இவர்களுக்கு தற்போது அமைச்சர் பதவி கிடைப்பது கேள்விகுறியாக உள்ளது.இவர்கள் தற்போதைய எம்.பி. பதவியை தக்க வைத்து கொள்வார்களா? அல்லது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து எம்எல்ஏ-வாக தொடர்வார்களா? இவர்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால் தற்போதுள்ள எம்எல்ஏ-க்களில் இருந்து இருவர் எம்.பி. பதவிக்கு தேர்வு செய்யப்படுவர்.இவ்வாறு நடக்கும் பட்சத்தில் அது அ.தி.மு.க-விற்கு எதிராக அமையும்.அதனையடுத்து அவர்கள் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய நேர்ந்தால் மீண்டும் இரு தொகுதிக்களிலும் இடைத்தேர்தல் நடைபெறும்.