நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகவும், பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளை நிறைவு செய்துள்ளது.
பாஜக கிட்டத்தட்ட தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றழைக்கப்படும் அமேதி தொகுதியில் பாஜகவினர் எதிர்பார்த்தது போலவே தினேஷ் சிங் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு சோனியா காந்தி எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிக வாக்குகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது..
அமேதி தொகுதியில் 3 முறை வென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் சோனியா காந்தி 5 முறை வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை மாநிலங்களவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் புதிய வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில், தனது சொந்த தொகுதியான அமேதி தொகுதியை விட்டுவிட்டு, தனது தாயின் தொகுதியான ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மேலும், ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிஷோரி லால் ஷர்மா களம் இறக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை என்பதை காங்கிரஸ் கட்சி மறைமுகமாக அறிவித்துள்ளது.