எம்பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி! அதற்கு இதுதான் காரணமா?
கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் நின்று வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வயநாடு தொகுதியின் எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி அவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பியாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து தற்பொழுது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார்.
வயநாடு தொகுதியில் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்திலும், ரேபரேலி தொகுதியில் 3,90,030 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். இந்நிலையில் ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் எம்பியாக பதவி வகிக்க முடியாது என்ற காரணத்தினால் ராகுல் காந்தி அவர்கள் வயநாடு தொகுதியில் இருந்து எம்பி பதவியை இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து தனக்கு வாக்களித்த வயநாடு மக்கள் அனைவருக்கும் கடந்த 12ம் தேதி நன்றி தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தி அவர்கள் ரேபரேலி தொகுதியில் எம்பியாக தொடர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் கேரளா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.சுதாகரன் அவர்கள் பொதுக்கூட்டம் ஒன்றில் “காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வயநாட்டை விட்டுச் செல்வது வருத்தமாக இருக்கின்றது” என்று கூறியிருந்தார். இதை வைத்து பார்க்கும் பொழுது ராகுல் காந்தி அவர்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ராகுல் காந்தி அவர்கள் ராஜினாமா செய்யும் வயநாடு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் ராகுல் காந்தி அவர்களின் சகோதரி பிரியங்கா காந்தி அவர்கள் போட்டியிடுவார் என்று டெல்லி காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது. இதையடுத்து எதிர்பார்த்தது போலவே ராகுல் காந்தி அவர்கள் வயநாடு எம்பி பதவியை நேற்று(ஜூன்17) ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் வயநாடு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அவர்களை வேட்பாளராக நிறுத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் வீட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அளித்த சட்டசபை எதிர்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் அவர்கள் “மிகவும் பிரியமான எங்கள் வயநாடு தொகுதியில் மிகவும் எங்களுக்கு பிரியப்பட்ட பிரியங்கா காந்தி அவர்களை ராகுல் காந்தி அவர்களும் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளராக நியமித்துள்ளது. வயநாட்டுக்கு வருகை தரவுள்ள பிரியங்கா காந்தியை நாங்கள் வரவேற்கின்றோம். சரித்திரம் சொல்லும் விதமாக பெரிய வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அவர்களுக்கு வெற்றியை அளிப்போம். மேலும் பிரியங்கா காந்தி அவர்களை கேரளாவுக்கு பிடித்தமான நபர்களாக மாற்றுவோம்” என்று கூறினார்.