Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

Rain Alert in Tamilnadu

Rain Alert in Tamilnadu

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்கள் மழை பெய்யாத சூழலில் தற்போது மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சுமார் 630 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து சுமார் 670 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.

கனமழை பெய்ய வாய்ப்பு

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22-ந் தேதி (நாளை) வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 23-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அதிகபட்சமாக 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

ஆந்திர கடலோர பகுதிகள், தமிழக-புதுச்சேரி கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே 21, 22-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை

கனமழை குறித்த வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, நாகை, பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படட்தால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகளை கடற்கரையில் பத்திரமாக நிறுத்திவைத்து உள்ளனர்.

Exit mobile version