தொடர்கனமழை காரணமாக ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கால் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு உண்டாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மழைநீர் தேங்கி நின்று வருகிறது ஆகவே மழை நீரை பம்ப்செட் மோட்டார் மூலமாக வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. எனவே மாணவர்கள் மற்றும் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல தீவிர கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக பள்ளிகளில் நீர் தேங்கி இருப்பதால் 5 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த பள்ளிகளின் பெயர் வருமாறு, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மானாம்பதி திருப்போரூர் ஒன்றியம், அரசு மேல்நிலைப்பள்ளி அனகாபுத்தூர் புனித தோமையார் மலை ஒன்றியம், அரசு உயர்நிலைப்பள்ளி நன்மங்கலம் புனித தோமையார் மலை ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நன்மங்கலம் புனித தோமையார் மலை ஒன்றியம் உள்ளிட்ட 5 பள்ளிகளுக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.