விரைவில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்?

0
154

பருவ மழை தீவிரமடைந்ததிலிருந்து தமிழக முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

ஆனால் இந்த மழையின் காரணமாக தலைநகர் சென்னை சற்று அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்ற வருடங்களில் இருந்த பாதிப்பை விட நடப்பாண்டில் பாதிப்பு சற்று குறைவாகவே காணப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

இதற்குக் காரணம் மாநில அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் ஒன்றிணைந்து மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள் தான் என்றும் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இலங்கை கடற்கரையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 9ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும். இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதோடு குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

ஆகவே இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

வரும் 9ம் தேதி தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரையில் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல வரும் 10ம் தேதி தமிழகம் மற்றும் புதுவையில் அதோடு காரைக்காலிலும் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதோடு, இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ததற்கான வாய்ப்பு உள்ளது.

வரும் 9ம் தேதி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது.

வரும் 10 ம் தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது ஆகவே இந்த தினங்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.