கோவிலுக்குள் தேங்கிய மழை நீர்! அதுவும் இங்கு இதுதான் முதல்முறையாம்!
கடந்த 20 நாட்களாகவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதன் காரணமாக அனைத்து இடங்களிலுமே மழை பொழிந்த வண்ணமே உள்ளது. அதனால் கடந்த வாரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் உட்பட அனைத்தும் விடுமுறை விடப்பட்டன.
அனைத்து நதிகளிலும், ஏரிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. நாம் ஆக்கிரமிப்பு செய்த நீர்நிலைகள் எல்லாம் எங்களுக்கு வழி விடுங்கள் என்று சொல்வது போல், அதனது இடங்களை கைப்பற்றும் நோக்கில் அதன் இடங்களில் எல்லாம் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் வீட்டு மனைகளை சுற்றி நீர் தேங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது நெல்லை மற்றும் திருச்செந்தூர் பகுதிகளிலும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடியுடன் கூடிய பலத்த மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. வெள்ளநீர் காரணமாக தாமிரபரணி ஆறும் நிரம்பி வழிகின்றது.
மேலும் திருச்செந்தூர் கோவிலிலும் மழைநீர் புகுந்தது. அதன் காரணமாக பக்தர்கள் கோவிலை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். கோவிலினுள் உள் பிரகாரங்கள் மற்றும் வெளிப்பிரகாரங்கள் அனைத்திலும் மழைநீர் வரத்து அதிகரித்து கொண்டே இருப்பதால் ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் மழைநீர் தேங்கி இருப்பது இதுவே முதல் முறை என்றும், அங்கு இருப்போர் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் தெரிவித்துள்ளனர்.