சின்னம்மாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனின் துணிச்சல் பேட்டி!

0
132

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் இல்லத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து அங்கு கல்வெட்டு செதுக்கி அதில் தன்னுடைய பெயரை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று எழுதியிருந்தார்.

இது அதிமுகவினர் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதா தோழி சசிகலா மீது புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார்.

ஆனாலும் இதற்கு காவல்துறையினர் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது புகார் கொடுத்ததற்கான ரசீது உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கு காவல்துறையினர் முன்வரவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் உரையாற்றிய அவர் காவல்துறையினர் சசிகலா மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயக்கம் காட்டுவதில் இருந்து திமுக அரசு சசிகலாவிற்கு மறைமுக ஆதரவை கொடுத்து வருவது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது என தெரிவித்து பரபரப்பை உண்டாக்கினார்.

அதோடு சசிகலா அதிமுகவின் கொடியை தன்னுடைய காரில் பயன்படுத்துவதும், தலைவரின் இல்லத்தில் சென்று அதிமுகவின் கொடியை ஏற்றி அங்கு கல்வெட்டில் தன்னுடைய பெயரை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று எழுதி வைத்திருப்பதும், சட்டவிரோதமானது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது, ஆகவே இவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அந்த புகார் தொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை வழங்கியிருக்கிறார், அந்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார்.

அதோடு கடந்த 2017 ஆம் வருடம் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி போடப்பட்ட இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, இதில் உரிய பதில் வழங்க வேண்டுமென்று சிவில் நீதிமன்றத்திற்கு எதிர்தரப்பு அறிவித்து இருக்கிறது. இவ்வாறு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் இது குறித்து காவல்துறையில் எந்தவிதமான புகாரும் வழங்க இயலாது. ஒருவேளை புகார் வழங்கினால் நடவடிக்கை எடுக்க சட்டத்திற்கு இடமில்லை என தெரிவித்திருக்கிறார்.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை பெற்று வருகை தந்தபோது தன்னுடைய காரில் அதிமுகவின் கொடியை பயன்படுத்தியதாக அப்போதைய அதிமுக ஆட்சியில் புகார் வழங்கப்பட்டது. அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, இதுபோன்று தான் தற்சமயம் அளிக்கப்பட்டு இருக்கின்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதமான முகாந்திரமும் கிடையாது என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியிருக்கிறார்.