“எல்லாம் பாத்துட்டேன்… ஆனா நிம்மதி இல்லை”- ஆன்மீக நிகழ்வில் ரஜினி பேச்சு!
சூப்பர் ஸ்டார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒரு ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. கடைசியாக அவர் நடித்த அண்ணாத்த திரைப்படமும் தோல்விப் படமாக அமைந்தது. அதன் பின்னர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் நடந்த யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் “பணம், புகழ், அதிகாரம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதியை அனுபவிக்கவில்லை. வாழ்க்கையில் நிம்மதி நிரந்தரம் இல்லை. நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி தந்த படங்கள் என்றால் அது பாபா மற்றும் ராகவேந்திரா படங்கள்தான்.
இந்த படங்கள் வெளியான பின்னரே மக்களில் பலருக்கு ராகவேந்திரா சாமி மற்றும் பாபா பற்றி தெரியவந்தது. பாபா வந்த பிறகு பலரும் இமயமலைக்கு சென்றதாக கூறினார்கள். உலகத்தை விட்டு செல்லும்போது நோயாளியாக செல்லக் கூடாது” எனக் கூறியுள்ளார். ரஜினியின் இந்த பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.