Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது…! ராமதாஸ் வேதனை…!

திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவரும், பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக திமுக கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் அக்கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதால் பேச்சுவார்த்தை ஒரு முடிவிற்கு வரவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் துணை முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலின் பாமகவின் இந்த கோரிக்கைக்கு எப்படி சம்மதம் தெரிவிப்பார் என்றும் திமுகவினர் கேட்கிறார்கள். அதனால் தான் பாமகவின் பலமாக கருதப்படும் வன்னியர் சமூக மக்களின் ஓட்டுக்களை தங்கள் பக்கம் இழுக்கும் தந்திரத்தை அவர் ஆரம்பித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

அதற்கான முதற்கட்ட வேலையாகத் தான் வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் மகனை திமுகவிற்கு ஆதரவு தருவதாக பேச வைத்திருக்கின்றார்.

வன்னியர் சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பாமகவுடன் கூட்டணி வைக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களிடம் இறங்கிப் போவதை விடவும் வன்னியர் சங்க தலைவராகவும் பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய காடுவெட்டி குரு அவர்களின்  மகன் கனலரசன்  வன்னியர் சமூகத்தினர் இடையே மிகுந்த செல்வாக்குடன் இருப்பதால் அவரை நாம் பக்கம் இழுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்பது உதயநிதி ஸ்டாலினின் திட்டம் என்றும் கூறுகிறார்கள். திமுக கூட்டணியில் ஒரே ஒரு சீட் மட்டும்தான் கேட்கிறாராம் கனலரசன்.

பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்து தொகுதி பங்கீட்டு பேரத்தில் ஈடுபடுவதை விட ஒரே ஒரு சீட் கொடுத்து விட்டு முடிந்த வரையில் வன்னியர் சமூக மக்களின் ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் உதயநிதி ஸ்டாலின்.

மாவீரன் மஞ்சள் படை அமைப்பை ஆரம்பித்து நடத்தி வரும் கனலரசன் நேற்றைய தினம் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்யவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் அவர்கள் வன்னியர் சமுதாய மக்கள் மற்றும் 108 சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்தார்.அதேபோல இப்போது வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டையும் திமுக வாங்கித் தரும் என்று நம்புகிறோம். அதனால் தான் 234 தொகுதிகளிலும் திமுகவிற்கு ஆதரவாக மாவீரன் மஞ்சள் படை பிரச்சாரம் செய்யும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version