Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!!

சிங்கள அரசு மீது குற்றச்சாட்டு; ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசை எதிர்க்கும் ராமதாஸ்!!

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசு போர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஈழத்தமிழர் நலன் மற்றும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாதபோது, இலங்கை ராணுவத்திற்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க 50 மில்லியன் டாலர் வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்திருப்பது ஏன்..? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அரசின் நிதி சம்பந்தமான அறிவிப்பானது ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் என்றும், இதனால் ஈழத்தமிழர்கள் வருங்காலத்தில் சிங்கள அரசால் ஒடுக்கப்படும் ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழக மற்றும் இலங்கை கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவிற்கு அளித்த உறுதியை இலங்கை காப்பாற்றவில்லை. இத்தகைய சூழலில் இலங்கை அரசுக்கு பாதுகாப்பு கருவி வாங்க இந்தியா உதவ வேண்டிய தேவை என்ன..? என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈழத்தமிழர்களின் படுகொலை சம்பவத்தில் நேர்மையை கடைபிடிக்காத சிங்கள அரசிற்கு இந்தியா உதவ கூடாது. மேலும் உதவி வழங்கினால் அது போர் குற்றத்திற்கான வெகுமதியாகும், ஆகவே இலங்கைக்கு நிதி வழங்கும் இந்திய அரசு தனது முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version