Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முருகப்பெருமான் 11 முகங்களுடன் காட்சி தரும் திருக்கோவில்!

ராமநாதபுரம் அருகே இருக்கிறது குண்டுக்கரை என்ற கிராமம் இங்கு சுவாமிநாத சுவாமி கோவிலுள்ளது. முருகப்பெருமானுக்கு அமைந்த இந்த கோவிலில் 11 தலைகளுடன் மற்றும் 22 கரங்களுடன் நின்ற கோலத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப் பெருமான் இந்த தலத்திற்கு வந்து தங்கியதாக தலபுராணம் தெரிவிக்கிறது. இங்கே முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் கொடுப்பதாக நம்பிக்கை நிலவி வருகிறது.

ராமநாதபுரம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்கர சேதுபதி என்பவர் வசித்து வந்தார் இவர் நாள்தோறும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சென்று அங்கிருக்கின்ற முருகப்பெருமானை வழிபடுவது வாடிக்கை என சொல்கிறார்கள்.

அவருடைய கனவில் ஒருநாள் தோன்றிய முருகப்பெருமான் தற்போது குண்டுகரையில் இருக்கும் முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக ஒரு சிலையை பிரதிஷ்டை செய்யுமாறும், இதன் காரணமாக, இந்த பகுதி மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றும் தெரிவித்து மறைந்து விட்டாராம் முருகப்பெருமான்.

அதனடிப்படையில் குண்டுக்கரை பகுதிக்குச் சென்ற பாஸ்கர சேதுபதி ஆலயத்தில் இருந்த பழைய முருகன் சிலையை நீக்கிவிட்டு தற்போதுள்ள புதிய சிலையை நிறுவியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.

இந்த கோவிலில் சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலில் முருகப்பெருமான் போலவே துர்க்கை அம்மனுக்கும் மாபெரும் சிலை உள்ளதாக சொல்லப்படுகிறது. 18 திருக்கரங்களுடன் அருளும் இந்த துர்கா தேவி அம்மன் 7 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தருகிறார்.

இந்த அம்மனுக்கு நவராத்திரியின் 9 நாட்களும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. தைப்பொங்கல் தினத்தன்று சாகம்பரி என்னும் அலங்காரம் செய்யப்படுகிறது.

அதாவது அந்த தினத்தில் காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் அம்பிகை காட்சி தருகிறார் என தெரிவிக்கப்படுகிறது.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி, உத்திரம், உள்ளிட்ட விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹாரம் மிக சிறப்பாக நடைபெறும் கோவில்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

இந்த கோவிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்கள் கல்வி. கேள்விகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புண்டு.

முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், ஆலயத் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும், நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள் பக்தர்கள்.

Exit mobile version