பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோனி தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்கள் அவரை சமாதானம் செய்து இருக்கின்றார்.
பாலியல் வழக்கில் சிக்கி இருக்கின்ற கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் அமைச்சர் ராமேஷ் ஜார்கிஹோனி பாரதிய ஜனதா கட்சியின் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தன்னுடைய சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் தன்னுடைய முடிவை மைசூரில் அறிவிக்க இருப்பதாக நேற்று முன்தினம் தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் அவர் மறுபடியும் அமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்காக மிரட்டி வருகிறார் என்று பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையில் மும்பைக்கு சென்ற ரமேஷ் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களை நேற்றையதினம் சந்தித்து உரையாடி இருக்கிறார். அந்த சமயத்தில் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் டெல்லி பாஜக தலைவர்களுடன் உரையாற்றி இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அதுவரையில் ராஜினாமா முடிவை எடுக்க வேண்டாம் என்று தேவேந்திர பட்னாவிஸ் அவரிடம் கேட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.