ரவா இட்லி இப்படி செய்தால் பஞ்சு போல் இருக்கும்.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
நாம் அடிக்கடி செய்து உண்டு வரும் ரவையில் இரும்புச் சத்து,வைட்டமின் ஈ,புரதம்,பொட்டாசியம்,துத்தநாகம்,நார்ச்சத்து,மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
ரவையில் கேசரி,உப்புமா,லட்டு என பல வகைகள் இருக்கிறது.அதில் சத்தான பஞ்சு போன்ற இட்லி செய்து கொடுத்தால் ரவை பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள்.
தேவையான பொருட்கள்:-
*ரவை – 1 கப்
*தயிர் – 1/2 கப்
*சமையல் சோடா – 1/2 தேக்கரண்டி
*எண்ணெய் – 4 தேக்கரண்டி
*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)
*பச்சை மிளகாய் – 1(நறுக்கியது)
*கேரட் – பாதி (துருவியது)
*கடுகு – 1 தேக்கரண்டி
*உளுந்து பருப்பு – 2 தேக்கரண்டி
*கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
*முந்திரி பருப்பு – 10
*சீரகம் – 1 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
*கறிவேப்பிலை – 1 கொத்து
*கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை:-
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் 4 தேக்கரண்டி ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின்னர் அதில் 2 தேக்கரண்டி கடலை பருப்பு,2 தேக்கரண்டி உளுந்தம் பருப்பு மற்றும் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள 1 பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.நன்கு வதக்கிய பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை,துருவிய கேரட் சேர்த்து வதக்கவும்.
பின்னர் 1 கப் ரவை சேர்த்து நன்றாக வறுக்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி விடவும்.இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.இதை நன்கு ஆற விடவும்.
பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி கொள்ளவும்.பின்னர் 1/2 கப் கெட்டியான தயிர் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.பிறகு அதில் கொத்தமல்லி இலையை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.இதை 20 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
பின்னர் அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.பின்னர் வழக்கம்போல் இட்லி வார்த்து கொள்ளவும்.இட்லி வெந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.இந்த இட்லிக்கு சாம்பார்,தேங்காய் சட்னி,கடலை சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.