கோவையில் மறுவாக்குப்பதிவு வேண்டும்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை..!!
நாடு முழுவதும் நேற்று 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் பல இடங்களில் நிறைய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாததால் பிரச்சனை ஏற்பட்டது.
குறிப்பாக கோவையில் அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த பல மக்கள் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என கூறி அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளிடம் விசாரித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவையில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. எந்த அடிப்படையில் இவர்களின் பெயர்களை நீக்கினார்கள் என்று தெரியவில்லை. அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடியில் மட்டும் மொத்தம் 1,353 வாக்குகள் உள்ளன.
இதில் கிட்டத்தட்ட 70% வாக்காளர்கள் அதாவது 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சராசரியாக 20 வாக்காளர்களின் பெயர்கள் இல்லை. இறந்தவர்களின் பெயர் கூட வாக்காளர் பட்டியலில் உள்ளது. ஆனால் உயிரோடு இருக்கும் நபர்களின் பெயர் இல்லை. திட்டமிட்டு தான் கோவையில் மட்டும் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதில் அரசின் தலையீடு இருக்கும் என்று சந்தேகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என கூறியுள்ளார். கோவையில் மட்டுமே ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.