விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிடுகிறதா? அதிமுக வேட்பாளர் தேர்விற்கான தாமதம் ஏன்?

0
148
Dr Ramadoss asks to Complete Plastic Ban in Tamilnadu

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக போட்டியிடுகிறதா? அதிமுக வேட்பாளர் தேர்விற்கான தாமதம் ஏன்?

தமிழக்கத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இந்த இடைத் தேர்தலில் திமுகவின் சார்பாக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எப்போதுமே தேர்தல் செயல்பாடுகளில் முன்னிலையில் இருக்கும் அதிமுக இந்த இடைத்தேர்தல் வேட்பாளர்கள் யார் என்பதை நேற்று வரை அறிவிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக நேற்று அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்டப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.எனினும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யாரென்று இன்று அறிவிக்கப்படுவதாக சொல்லியிருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பாளர் தேர்விற்கான அதிமுக நேர்காணலுக்கு மிகவும் குறைவான நபர்களே வந்திருந்தார்கள் என்று கூறப்படுகிறது. ஏறக்குறைய 90 நபர்கள் ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் விருப்ப மனு கொடுத்திருந்தாலும் அவர்களில் வெறும் 12 பேரை மட்டும் தான் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நேர்காணல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதம் உள்ள 78 பேரையும் தலைமைக் கழகத்தின் கூட்டம் நடக்கும் ஹாலில் வரிசையாக அமரவைத்து விட்டு இன்னோர் அறையில் நேர்காணல் நடத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த 12 நபர்களுடனான நேர்காணலை முடித்து கொண்டு மீதியுள்ள அந்த 78 நபர்களையும் தேடிவந்த முதல்வர் பழனிசாமியும்,துணை முதல்வர் பன்னீர் செல்வமும், இந்த இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்ந்து போய் விட வேண்டாம்.வரும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் இங்கு வந்த அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. இதை மனதில் கொண்டு எந்த தொய்வும் இல்லாமல் வழக்கம் போல தேர்தல் வேலையை பார்க்க வேண்டும். இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தலை காட்ட முடியும் என்பதை நம் மனத்தில் வைத்து இந்த தேர்தலில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இடைத்தேர்தல் வேட்பாளர் நேர்காணலுக்காக மொத்தம் 12 பேர்களே அழைக்கப்பட்டாலும் அதிமுகவில் அதற்கான போட்டி கடுமையாக இருந்திருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது. அதுவும் மற்றொரு தொகுதியான நாங்குநேரியை விட விக்கிரவாண்டியில்தான் அதிக போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.இதற்கு முதன்மையான காரணம் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செல்வாக்கு,அடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தனித்து போட்டியிட்டு 41000 வாக்குகளுக்கு மேல் பெற்ற பாமகவின் செல்வாக்கும் தான்.பாமக தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதால் அதிமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நேற்று நடந்த வேட்பாளர் தேர்விற்கான கூட்டத்தில் விக்கிரவாண்டி தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும், துணை முதல்வரான பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான லட்சுமணன் விக்கிரவாண்டி தேர்தலில் தான் நிற்க பன்னீர்செல்வத்திடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால், சி.வி.சண்முகமோ தனது ஆள்தான் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் என்கிறார்கள். நான் கை காட்டும் நபரை நிறுத்தினால் தான் அதிமுக வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார் என்கிறார்கள். ஒருகட்டத்தில் இதில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டதாக தெரிகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக புகழேந்தி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக எதிர்பார்த்த அளவுக்கு அவர் வலிமையான வேட்பாளர் இல்லை என்றும்,அவருக்கே அங்கு போட்டியிட விருப்பமில்லை என்றும் நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. எனவே ஆளும் அரசு என்ற அதிகார பலத்தோடு விக்கிரவாண்டியில் திமுகவை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அதிமுகவில் இருப்பதால் நாங்குநேரியைவிட விக்கிரவாண்டிக்கு அதிக போட்டி நிலவுகிறது என்கிறார்கள். சி.வி.சண்முகம் நிறுத்தும் நபரை வேட்பாளர் ஆக்குவதா, ஓபிஎஸ் சிபாரிசு செய்யும் லட்சுமணனை வேட்பாளராக ஆக்குவதா என்ற குழப்பம் ஒரு பக்கம் இருந்தாலும் அதிமுக தலைமைக்கு புதிய நெருக்கடி ஒன்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருப்பதாலும்,கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனியாக போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றுள்ளதாலும் இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பாக பாமக போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.இதற்கு காரணம் சமீபத்தில் மக்களவை தேர்தலுடன் நடத்தபட்ட தமிழக சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக குறிப்பிடத்தக்க தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தொடர பாமக வாக்கு வங்கி தான் முக்கியமான காரணம் என்று கருதப்படுகிறது. அதிமுக வெற்றி பெற்ற பெரும்பாலான தொகுதிகளில் பாமக தனி செல்வாக்குடன் திகழ்ந்து வந்துள்ளது என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இவ்வளவு செல்வாக்கிருந்தும் கடந்த முறை அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த தொகுதிகளை பாமக விட்டு கொடுத்துள்ளதாகவும்,அதற்கு பிரதி பலனாக இந்த இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியை அதிமுக பாமகவிற்கு விட்டு கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.வி.சண்முகம் ஆதரவாளரா? ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரா? என்ற குழப்பத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு பாமகவின் இந்த முடிவு புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.இது தான் வேட்பாளர் தேர்வு தாமதமாக காரணம் என்கிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.